ரயில் பயணத்தின் போது ராணுவ வீரரிடம் கைவரிசை : ஒரு மாதம் கழித்து மீண்டும் திருட வந்த கொள்ளையன்… ரயில் நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி!!
Author: Udayachandran RadhaKrishnan23 June 2022, 4:50 pm
கோவை வந்த ரெயிலில் ராணுவ வீரரின் பையை திருடிய இளைஞர், மீண்டும் இரண்டாவது முறையாக ரயில் நிலையத்திற்கு திருட வந்த போது கையும் களவுமாக சிக்கி கொண்டார்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த ராணுவ வீரரான சுகேஷ் கடந்த மாதம் 17-ஆம் தேதி சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு முன் பதிவு செய்யப்பட்ட ஏ.சி பெட்டியில் சென்றார்.
ரயில் கோவை ரயில் நிலையம் வந்தடைந்த போது சுகேஷ் தனது பையை எடுக்க முயன்றபோது பை காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பை காணாமல் போனது குறித்து சுகேஷ் கோவை ரெயில்வே காவல்துறையில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரமேஷ் மற்றும் செந்தில்குமார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் ராணுவ வீரரின் பையை திருடி செல்லும் காட்சி கள் பதிவாகி இருந்தன.
இதனை வைத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் காவல்துறையினர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது ராணுவ வீரரிடம் பையை திருடிய இளைஞர் ரயில் நிலையத்தில் நிற்பதை பார்த்தனர். சுதாரித்து கொண்ட காவல்துறையினர் அந்த இளைஞரை மடக்கி காவல் நிலையம் அைழத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த இளைஞர் கோழிகோட்டை சேர்ந்த ரத்திஷ் (வயது 38) என்பதும், அவர் மீது கேரள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதும், கோவையில மீண்டும் திருட வந்த போது மாட்டி கொண்டதும் தெரியவந்தது.
இந்த நிலையில் ராணுவ வீரரின் பையில் பொருட்கள் ஏதும் இல்லாததால் அதை வீசிவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து காவல்துறையினர் ரத்தீசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.