இன்று அனுமன் ஜெயந்தி விழா… 1,00,008 வடை மாலையில் ஜொலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர் ; பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு..!!!

Author: Babu Lakshmanan
11 January 2024, 11:48 am

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலைகள் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

மார்கழி மாதம் அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும் கொண்ட நன்னாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார். அதன்படி, இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல்லில் உள்ள, பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முன்னதாக, அதிகாலையில் 5 மணிக்கு கோவிலின் நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலைகள் சார்த்தப்பட்டன. பின்னர், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆஞ்சநேயர் வடை பிரியர் என்பதால், வடை மாலை சார்த்தி அவரை வணங்குவது சிறப்பம்சமாகும். பல்வேறு பலன்களை தரும் என்பது ஐதீகம்.

தொடர்ந்து, அருள்மிகு ஆஞ்சநேயருக்கு காலை 11 மணியளவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், எண்ணெய், சிகைக்காய், 5008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. வெற்றிலை மாலை அணிவித்து சொர்ண அபிசேகம். பின்னர், துளசி, ரோஜா, மல்லிகை, தாமரை உள்ளிட்ட பல்வேறு நறுமணமிக்க மலர்கள் கொண்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு பகல் ஒரு மணிக்கு, உடல் முழுவதும் தங்கக் கவசம் சார்த்தப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். மாலையில், ஆஞ்சநேயருக்கு புதிய முத்தங்கி அலங்காரம் செய்யப்பட இருக்கிறது.

நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா பக்தி சிரத்தையுடன் வெகு சிறப்பாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகளாக அணிவிக்கப்பட்ட வடைகள் மற்றும் அன்னதானம் ஆகிய பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் நாமக்கல் கோட்டை சாலை பகுதி மூடப்பட்டு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இவ்விழாவில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, வெளி மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ஆஞ்சநேயரை வழிபட்டுச் சென்றனர். ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டக் காவல் துறையினர் 600 போலீசார் உடன் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 540

    0

    0