ராகிங் செய்தால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் : மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan16 November 2022, 10:26 am
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கல்வி நிறுவனங்களில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை நிர்வாணமாக வளாகத்தில் ஓட வைத்து, ராகிங் செய்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கொள்காட்டி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட எஸ்.பிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ராகிங் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தாமதிக்காமல் விரைவாக முடிக்க வேண்டும் எனவும், ராகிங் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க, அது தொடர்பான புகார்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.