ஈஷா மஹாசிவராத்திரி விழா: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
Author: Babu Lakshmanan6 March 2024, 7:58 pm
கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா குறித்து மனுதாரர் கோரிய நிகழ்நிலை அறிக்கைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர்நீதி மன்றம், வழக்கை வரும் மார்ச் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
மஹா சிவராத்திரி விழாவிற்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், ஈஷாவிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் தனது விவசாய நிலத்தில் கலப்பதாக சிவஞானம் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இது குறித்து நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு இட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மனுதாரரின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும், மஹாசிவராத்திரி விழாவிற்கு 2 நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்ததால் மனுதாரரின் நோக்கம் கேள்விக்குரியதாக உள்ளது என்றும் கூறி வழக்கை மார்ச் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.