அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பிரியாவிடை… கண்ணீர் விட்டு கதறி அழும் மாணவர்கள் ..!

Author: Vignesh
9 July 2024, 11:55 am

வேடசந்தூர் அருகே தலைமையாசிரியர் பணியிட மாறுதலில் சென்றதால் கதறி அழுது விடை கொடுத்த பள்ளி மாணவ மாணவிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கொண்டம நாயக்கன்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு 2018 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக மோகன்தாஸ் வந்தார்.

அப்பொழுது அந்த பள்ளியில் 52 மாணவர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இதனையடுத்து சுற்றுப்புற கிராம பகுதிகளில் உள்ள பெற்றோர்களிடம் வீடு வீடாகச் சென்று அரசு பள்ளியின் சலுகைகள் பற்றி எடுத்துக் கூறி தற்பொழுது 103 மாணவர்கள் ஆக உயர்த்தியுள்ளார். மேலும் ஊர் முக்கிய பிரமுகர்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்களை அணுகி பள்ளியில் சுற்றுச்சுவர், வகுப்பறை கட்டிடம், கழிப்பறை கட்டிடம், மைக் செட், ப்ராஜெக்டர் உதவியுடன் ஸ்மார்ட் கிளாஸ் போன்றவற்றையும் உருவாக்கியுள்ளார்.

மேலும் பள்ளி ஆண்டு விழாவை தனியார் பள்ளிக்கு இணையாக நடத்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் எட்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகையும் வழங்கி உள்ளார்.

இந்நிலையில் அவருக்கு கடந்த 3-ம் தேதி பணியிட மாற்றம் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் பள்ளியிலிருந்து கிளம்பியுள்ளார். இதனை அறிந்த பள்ளி மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

அதனைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் மாணவர்களை தேற்றினார். அதன்பின்னர் மாணவர்கள் கைதட்டி உற்சாகமாக அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். இந்த காட்சியை அந்த பகுதியில் இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்திருந்தார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…