கொரோனா பரவல் குறைவால் அலட்சியம் கூடாது… பிற நோய்கள் மீது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் : ராதாகிருஷ்ணன்..!!

Author: Babu Lakshmanan
7 February 2022, 7:56 pm

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையிலும், கொரோனா அல்லாத பிற தொற்றா நோய்கள் மீதும் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கோவிட் 19 நோயாளிகள் பிரிவினை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது :- தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் விழுக்காடு 5 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மட்டும் 10 விழுக்காட்டுக்கும் மேல் தொற்று பரவி வருகிறது. கோயம்புத்தூர், தேனி, நாமக்கல், ஈரோடு, ஊட்டி, மற்றும் கேரளா மாநிலத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தொற்று பரவாத வண்ணம் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றுக்கான படுக்கைகள் 4% மட்டுமே நிரம்பியுள்ளது. நோய் பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையிலும் நோய்க்கான பாதுகாப்பு யுக்த்திகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா நோய் அல்லாத பிற தொற்றா நோய்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கபட்டு வருகிறது. கொரோனா நோய் தவிர்த்து தொற்றா நோய்களும் பொதுமக்களுக்கு அதிகபடியாக பரவி வருகிறது. இதில் பெண்களைவிட ஆண்களுக்கு புற்றுநோய் உட்பட அதிகப்படியான நோய் பரவி வருகிறது. ஆகையால் தொற்றா நோய்கள் மீதும் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் 1 கோடியே 6 லட்சம் பேர் இதுவரை இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். இது வேதனை அளிக்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 4.30 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பொதுமக்கள் தீவிரத்தை உணர்ந்து கட்டாயம் தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொள்ள வேண்டும். இதற்க்கான விழிப்புணர்வு பிரச்சாரம் சுகாதாரத்துறை மூலம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது, என்றார்.

  • Vidamuyarchi total earnings worldwide போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!
  • Close menu