அறுவடைக்கு முன்னரே இப்படியாயிடுச்சே… 60 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்.. அழுகிய பயிர்களை கையில் ஏந்தி கண்ணீர் விடும் விவசாயிகள்..!!

Author: Babu Lakshmanan
8 February 2023, 6:19 pm

நாகை : நாகை மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், முறையான கணக்கெடுப்பு செய்து இழப்பீடு வழங்க விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் ஒன்றியத்தில் 6131 ஹெக்டரிலும், கீழ்வேளூர் ஒன்றியத்தில் 11506 ஹெக்டரிலும், திருமருகல் ஒன்றியத்தில் 12306 ஹெக்டரிலும், கீழையூர் ஒன்றியத்தில் 9624 ஹெக்டரிலும், தலைஞாயிறு ஒன்றியத்தில் 10936 ஹெக்டரிலும் வேதாரண்யத்தில் 14305 ஹெக்டரிலும் என மாவட்ட முழுவதுமாக இந்தாண்டு சம்பா மற்றும் தாளடி சாகுபடி 64808 ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமில்லாமல் நிலக்கடலை 1437.4 ஹெக்டரிலும், எள்ளு 2086.6 ஹெக்டரிலும் பருத்தி 1540.6 ஹெக்டரிலும் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் சம்பா, தாளடி நெற்பயிர்கள் அறுவடை பணியானது துவங்கி நடைப்பெற்று வருகிறது. இதுவரை 18 ஆயிரம் ஏக்கர் அறுவடை பணிகள் நடைப்பெற்று முடிவடைந்துள்ளது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலான ஏக்கரில் அறுவடைக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பருவம் தப்பிய கனமழை கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்தது. அதிலும் குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக அதிகப்படியான பருவம் தப்பிய கன மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருக்குவளை, வேதாரண்யம் ஆகிய தாலுக்காக்களில் உள்ள அனைத்து பகுதிகளிலுமே கன மழை கொட்டித் தீர்த்தது.

இதில் கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளான காக்கழனி, மணலூர், பட்டமங்கலம், ராதாமங்கலம் இருக்கை, வடுகச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், திருக்குவளை தாலுக்காவில் கொளப்பாடு, பனங்குடி, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும், நாகை தாலுக்காவில் பாலையூர், திருமருகல், மருதூர் சுற்றுவட்டார பகுதிகளிலும், வேதாரண்யம் தாலுக்காவில் தலைஞாயிறு, ஆலங்குடி, மணக்காடு, மருதூர் உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் அடியோடு வயலில் சாய்ந்தது.

மேலும், தொடர்ந்து பெய்த கன மழையால் நெற்மணிகள் மூழ்கி போனது. தேங்கிய நீர் வடிய வைக்க முடியாமலும் மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் ஏக்கரில் தண்ணீரில் மூழ்கி கிடக்கும் நெல் மணிகள் முழுவதுமாக அழுகி போய் உள்ளது.

தண்ணீர் வடிய 10 நாட்கள் ஆகும் நிலையில் சாய்ந்த பயிர்கள் அனைத்தும் முளைக்கத் தொடங்கி விடும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாடுபட்டு கடன் வாங்கி விவசாயம் செய்து அறுவடை செய்யும் நேரத்தில் மழையால் ஒரு படி நெல்லைக் கூட அறுவடை செய்ய முடியவில்லை என இப்பகுதி விவசாயிகள் கலங்கி நிற்கின்றனர்.

திருக்குவளை, கீழ்வேளூர், திருமருகல், தலைஞாயிறு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இதுவரை எந்த வித கணக்கெடுப்பு பணிகளையோ, ஆய்வு இதுவரை மாவட்ட நிர்வாகம் செய்யாமல் உள்ளதாகவும் வேளாண்மை துறையினர் உடனடியாக பாதிக்கப்பட இடங்களை முழுமையாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதே போன்று ஊடு பயிராக நாகை மாவட்டத்தில் உளுந்து 3155 ஹெக்டரிலும், பச்சை பயறு 24134 ஹெக்டரிலும் தெளிக்கப்பட நிலையில் அனைத்துமே இந்த மழையினால் நாசமாகி போனதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் முறையான கணக்கெடுப்பு நடத்தி அரசு நிவாரணம் வழங்கவும், பயிர் காப்பிட்டு நிறுவனங்களில் இழப்பீடு தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கை.

இந்த ஆண்டு முன் கூட்டியே டெல்டா மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்த நிலையில், மகிழ்ச்சியாக விவசாயத்தை தொடங்கிய விவசாயிகள் இந்த பருவம் தப்பிய மழையின் தண்ணீரால் வேதனை அடைந்ததுதான் மிச்சம் என்றால் மிகையாகாது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 605

    0

    0