அறுவடை நேரத்தில் கனமழை.. நீரில் மூழ்கிய 30 ஏக்கர் பயிர்கள் : நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2022, 4:01 pm

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன.

திருவாரூர் மாவட்டத்தில் மூன்று லட்சத்து 76 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகள் என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை 500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 529 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்பொழுது வரை கனமழை என்பது பெய்து வருகிறது. இந்த நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெல் பயிர்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மழை நீரில் அடியோடு சாய்ந்து உள்ளது.

கமலாபுரம், எருக்காட்டூர், கண்கொடுதவனிதம், கொட்டாரகுடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிர்கள் மழை நீரில் முழுவதுமாக சாய்ந்து உள்ளன. இதனால் விவசாயிகள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் தற்பொழுது அறுவடை நேரத்தில் மழை பெய்து பயிர்கள் அனைத்தும் மழைநீரில் சாய்ந்துள்ளது எங்களுடைய ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் பாதிக்கக் கூடிய விஷயமாக உள்ளது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளியில் இருந்ததால் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நெல் மூட்டைகள் அதிக அளவில் மழையில் நனைந்து உள்ளன.

அது மட்டுமன்றி விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்வதற்காக கொண்டுவந்து அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகளை அதிக அளவில் மழையில் நனைந்து உள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

ஆகையால் ஈரப்பதத்தை கணக்கிலெடுக்காமல் உடனடியாக விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

  • Vijay surrenders to Sun TV… Jana Nayagan stuck திரைக்கு வந்து சில ‘நாட்களே’ ஆன… சன் டிவியிடம் சரண்டர்… சிக்கித் தவிக்கும் ஜனநாயகன்..!!