கட்சிக்காக வீடு, வீடா போய் ஓட்டுக்கு பணம் கொடுத்தேன்.. இப்ப என்கிட்டயே லஞ்சமா..? காப்பாத்துங்க ஐயா… குமுறும் திமுக நிர்வாகி…!!

Author: Babu Lakshmanan
10 October 2023, 7:51 pm

கவுன்சிலர் எலெக்சனுக்கு வீடு, வீடா போய் திமுகவுக்காக ஓட்டுக்கு நான் பணம் கொடுத்தேன் என்றும், என்னிடமே அமைச்சர் லஞ்சம் கேட்பதாக திமுக பிரமுகர் ஒருவர் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 40வது வார்டு, இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பையா, திமுகவில் வார்டு செயலாளராக பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளார். அவரது மகன் பூமிநாதன் 7 வயது சிறுவனாக இருந்த போதிலிருந்து, தி.மு.க.வில் தொண்டராக இருந்து வருகிறார். கடந்த 6 வருடங்களுக்கு முன்பு குடும்ப சூழ்நிலை காரணமாக திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில், வீட்டின் பத்திரம் அடமானம் வைத்து 10 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

வறுமையின் காரணமாக கடனும், வட்டியும் செலுத்த முடியாத சூழலில் இருந்து வந்துள்ளார். வங்கியில் வட்டி அதிகரித்து வட்டியுடன் 18 லட்சம் கட்ட வேண்டியுள்ளது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூலி தொழிலாளியான அவர், மனைவி குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 2 குழந்தைகளுக்கு படிப்பு செலவு, குடும்ப சுமையால் பயந்து போன தி.மு.க.தொண்டர் பூமிநாதன் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அக்கம், பக்கத்தினர் மீட்டு அவருக்கு அறிவுரை கூறி திமுக கட்சி மேலிட நிர்வாகிகளை சந்திக்க கூறியுள்ளனர்.

பலமுறை அலைந்தும் அறிவாலயத்தில் ஒருவழியாக முதலமைச்சரை சந்தித்து, கழக வளர்ச்சி நிதியாக 1017 ரூபாய் உண்டியல் பணத்தை கொடுத்து குழந்தைகளுடன் சந்தித்து வாழ்த்து பெற்று தனது பிரச்சனையை தெரிவித்துள்ளார். அப்போது, உங்கள் மாவட்ட அமைச்சர், மாவட்ட செயலாளரை சந்திக்க சொன்னதாக தெரிகிறது.

அமைச்சர் மு.பெ.சாமிநாதனையும், மாவட்ட செயலாளர் பத்மநாபனையும் அவரது அலுலகத்தில் பலமுறை சந்தித்து தெரிவித்துள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை, மேலும் அமைச்சரின் உதவியாளர் லஞ்சம் கேட்டதாகவும் புகார் தெரிவித்தார் பூமிநாதன். இதனால் பூமிநாதன் முதலமைச்சர் தனி பிரிவுக்கு தபால் அனுப்பியுள்ளார். அதனால் அமைச்சர் சாமிநாதன் முதலமைச்சருக்கு பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளார்.

கடந்த 3 வருடங்ககளாக அலைந்து திரிந்து அமைச்சர், மாவட்டம், மாநகர நிர்வாகிகளை சந்தித்தும் எந்த பயனும் இல்லை என்றும், உட்கட்சி பூசலால் அலைக்கழிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இதுவரை அவரது பிரச்சனை தீர்க்கப்படாததால் நொந்து போன திமுக தொண்டர் பூமிநாதன் கண்ணீர் மல்க மண்டியிட்டு முதலமைச்சருக்கு தன் வேதனையை தெரிவித்தார்.

மேலும் சொந்த கட்சிக்காரனுக்கே எந்த உதவியும் செய்யாத ஆட்சி, பொதுமக்களுக்கு எவ்வாறு உதவி செய்யும் என்று ஆவேசத்துடன் கூறினார். மேலும், அவர் தேர்தல் நேரங்களில் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்ததும், ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். கட்சிக்காக 7 வயதில் இருந்து பாடுபட்ட எனக்கு எந்த ஒரு உதவியும் கட்சி செய்யாமல் உள்ளதாக கூறினார்.

தற்போது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வருகிறார். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 418

    0

    0