தமிழுக்காக உயிர் கொடுத்தவர் தண்டாயுதபாணி : பிஎஸ்ஜி கல்லூரி பவளவிழாவில் பீளமேடு பெயர்காரணம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சுவாரஸ்யம்!!
Author: Udayachandran RadhaKrishnan26 August 2022, 8:30 pm
கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 75 ஆண்டு பவள விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியை முன்னிட்டு, கின்னஸ் சாதனை முயற்சியாக 75 ஆயிரத்து 168 பானைகள் மூலம் 75 என்ற எண் வடிவமைக்கப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கல்லூரி முதல்வரிடம் கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “3 நாட்கள் பயணமாக மேற்கு மண்டலத்திற்கு வருகை தந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், இயக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் இங்கே வந்துள்ளேன்.
இதனை தனியார் நிகழ்ச்சியாக பார்க்கவில்லை. எல்லோருக்கும் பொதுவான நிகழ்ச்சியாக பார்க்கிறேன். தனிப்பட்ட தனது குடும்பத்திற்காக மட்டும் வாழாமல் பொது நன்மைக்காக வந்தவர் பூ.சா. கோவிந்தசாமி. அவர் வணிகம், வேளாண்மையில் ஈட்டிய சொத்தை அற நிலையத்திற்கு பிரித்து கொடுத்தார்.
இந்த சிந்தனை 100 ஆண்டு முன்பு தோன்றியது பாராட்டுக்குரியது. நூறு ஆண்டுகளாக மாணவர் அறிவு நலன் பேணி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு காலத்தில் பூளைப்பூ விளைந்த பூமி பூளைமேடு என அழைக்கப்பட்டது. இன்று பீளமேடு என அழைக்கப்படுகிறது.
பிஎஸ்ஜி என்பதை பீப்பிள் சர்வீஸ் குட் என பார்க்கிறேன். மக்களுக்கு உண்மையான சேவையை சிறப்பாக செய்து வருகிறது. 1965 ம் ஆண்டில் ஆதிக்க இந்தி திணிப்பிற்கு எதிராக மாணவர் சமுதாயம் வீரம் மிகுந்த போராட்டம் நடத்தியது. அப்போது தீ மூட்டியும், நஞ்சுண்டும் மொழி காவலர்கள் மரணம் அடைந்தனர்.
அதில் ஒருவராக தமிழுக்காக உயிர் கொடுத்த பீளமேடு தண்டாயுதபாணி, பிஎஸ்ஜி கல்லூரி மாணவர். இதேபோல சிவ்நாடர், மயில்சாமி அண்ணாதுரை ஆகியோரும் இக்கல்லூரி மாணவர்கள். பிஎஸ்ஜி நிறுவனம் கல்வி, மருத்துவம், ஆன்மிகம், தொழில்நுட்பம், சமூக சேவை செய்து வருகிறது.
இவை அனைத்தும் மனிதநேயத்தின் கிளைகள். இந்நிறுவனத்தினர் சமதர்ம சமத்துவ சமுதாயம் அமைய வேண்டுமென்ற சிந்தனையாக கொண்டவர்கள். படிப்படியாக வளர்ந்து முதன்மையான கல்லூரியாக வளர்ந்திருக்கிறார்கள்.
இக்கல்லூரி தர வரிசையில் சிறப்பிடம் பெற்றுள்ளது. 60 விழுக்காடு மாணவிகளும், 60 விழுக்காடு பெண் ஆசிரியர்களும் இருப்பது பாராட்டுக்குரியது. இந்நிறுவனத்தினர் கிராமங்களை தத்தெடுத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் சிறு தொழில் முனைவோர் நலிவடைந்தனர். 75ம் ஆண்டு பவள விழாவை 75 ஆயிரம் பானைகள் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாடு என்பது இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம். தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் 21 தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், 32 தலைசிறந்த கல்லூரிகள், 10 ஆராய்ச்சி நிறுவனங்கள், 35 பொறியியல் கல்லூரிகள், 8 மருத்துவக்கல்லூரிகள் உள்ளிட்டவை உள்ளன.
கல்வியில் சிறந்த மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம். இதற்கு நீதிக்கட்சி போட்ட விதை காரணமாக அமைந்துள்ளது. இந்த வளர்ச்சியை இந்தியா வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையில் உன்னதமான பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். நான் மட்டும் முதல்வன் அல்ல. இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக வேண்டுமென நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்து ஆற்றலும் கொண்ட இளைஞர்களாக மாணவர்கள் இருக்கின்றனர். ஆனால் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் போதைப்பொருட்கள் பழக்கத்திற்கு அடிமையாவது கவலையளிக்கிறது. அப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்கவும், புதிதாக அடிமையாவதை தடுக்கவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
ஒரு மாணவர் போதைக்கு அடிமையாவது அவருக்கு மட்டுமின்றி குடும்பம் மற்றும் மாநில வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.நல்ல கல்வி மற்றும் நல்லொழுக்கம் மாணவர்களுக்கு அளிக்கும் கடமை கல்வி நிறுவனங்களுக்கு உண்டு” என அவர் தெரிவித்தார்.