சபரிமலை 18 படியில் முதுகை காட்டிய போலீசார்.. மரபு மீறப்பட்டதா? கொதித்தெழும் பக்தர்கள்!

Author: Hariharasudhan
27 November 2024, 11:11 am

சபரிமலை ஐயப்பன் கோயில் 18 படியில் முதுகைக் காட்டியபடி குரூப் போட்டோ எடுத்த காவலர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

பத்தனம்திட்டா: உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, தற்போது மாலை போட்டு, விரதம் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள், சபரிமலை சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய 18 படி வழியாகச் சென்று தரிசனம் செய்வதை புனிதமாக கருதுகின்றனர்.

அதேநேரம், இருமுடி கட்டுடன் செல்லும் பக்தர்களுக்கு மட்டுமே 18 படிகள் வழியாகச் சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல், சபரிமலையின் மேல் சாந்தி மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தினருக்கு மட்டுமே உரித்தானது. இதில் விதிவிலக்குகள் உண்டு.

இதனிடையே, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலையில், அவர்களை படிகளில் ஏற்றி விடுவதற்கான பணிகளை போலீசார் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல், ஐயப்பனுக்கு பின்புறமாக முதுகைக் காட்டி நிற்கக் கூடாது என்ற மரபும் சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சபரிமலையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் போலீசார், 12 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவது வழக்கம். அந்த வகையில், கோயில் நடை திறக்கப்பட்ட நவம்பர் 15ஆம் தேதி முதல் பணியாற்றிய முதல் குழுவினர் பணி முடிந்து திரும்பி உள்ளனர்.

Sabarimala group photo issue

இவ்வாறு தாங்கள் பணி முடிந்து செல்லும்போது கோயில் நடை சாத்தப்பட்டிருந்த பிற்பகல் நேரத்தில், படியில் நின்று கொண்டு ஐயப்பனுக்கு முதுகை காட்டியபடி குழுப் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: விஜய்யை டம்மியாக்கிய வெற்றி மாறன்… விடுதலை 2 ட்ரெய்லரில் அந்த வசனத்தை கவனிச்சீங்களா?!

போலீசாரின் இந்தச் செயலுக்கு ஆன்மீக அமைப்புகள், பக்தர்கள் தரப்பிலும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும், இவ்வாறு மரபு விதிமீறல்களில் ஈடுபட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்து உள்ளனர்.

இவ்வாறு இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள காவல்துறை கூடுதல் இயக்குனர் ஸ்ரீஜித், சபரிமலையில் பணியில் உள்ள எஸ்பி பைஜுவிற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பணி முடிந்து திரும்பி உள்ள போலீசாரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 146

    0

    0