மயிலாடுதுறையில் கபாடி போட்டிக்கான உயர்தர பயிற்சி நிறுவனம் : அண்ணாமலை உறுதி

Author: Babu Lakshmanan
30 September 2022, 11:18 am

மதுரையில் நடைபெற்ற மோடி லீக் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பரிசுகளை வழங்கினார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் தமிழக பாஜக சார்பில் மோடி லீக் கபாடி போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளானது தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, திருச்சி புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட 60 இடங்களில் நடைபெற்றது.

இதனையடுத்து, இதில் தேர்வு செய்யப்பட்ட அணிகளுக்கான இறுதிசுற்று போட்டி மதுரையில் கடந்த 27ஆம் தேதி மதுரா கல்லூரி விளையாட்டு திடலில் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில், நேற்று இறுதிபோட்டி நடைபெற்றது. இதில் சேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதியது. இதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கிவைத்தார்.

3 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 29:32க்கு என்ற புள்ளி அடிப்படையில் சேலம் கிழக்கு அணி 3புள்ளிகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்று முதல் பரிசை தட்டிச்சென்றது. இரண்டாம் பரிசை சேலம் மேற்கு அணியும், மூன்றாம் பரிசை திருநெல்வேலி அணியும் தட்டி சென்றது.

வெற்றிபெற்ற சேலம் கிழக்கு அணிக்கு 15லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் வெற்றி கோப்பையையும், சேலம் மேற்கு அணிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும், திருநெல்வேலி அணிக்கு மூன்றாவது பரிசாக 5 லட்சம் ரூபாயையும் அண்ணாமலை வழங்கினார். இதனை தொடர்த்து, கபாடி போட்டியின் இந்திய, தமிழக வீரர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன், பாஜக இளைஞர் நலன் விளையாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத்ரெட்டி, அமெச்சூர் கபாடி கழக தலைவர் சோலை ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து விழாவில் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், “அடுத்தாண்டு மோடி கபாடி லீக் தஞ்சாவூரில் நடைபெறும். அடுத்த ஆண்டு முதல் பரிசாக 30 லட்சம் பரிசு வழங்கவுள்ளோம். இந்த ஆண்டு 60 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர். அடுத்தாண்டு 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள். இந்த போட்டியில் கலந்து கொள்பவர்களை இந்திய அணியில் இடம்பெற செய்ய வைப்போம்.

மயிலாடுதுறையில் கபாடி போட்டிக்கான உயர்தர பயிற்சி நிறுவனம் நிச்சயம் கொண்டு வருவோம். ஒரு விளையாட்டு போட்டியை எப்படி நடத்த வேண்டும் என்பது போல இந்த மோடி கபாடி லீக் போட்டியை நடத்தியுள்ளோம். இந்த ஆண்டு போட்டி சரித்திர போட்டியாக நடத்தியுள்ளோம். அடுத்தாண்டு வரலாறாக இருக்கும். வெற்றிபெறும் அணியை அடுத்தகட்டத்திற்கு செல்வதற்காக தான் பரிசுத்தொகைகளை வழங்குகிறோம். போட்டியை சிறப்பாக நடத்த உதவிய மதுரை மக்களுக்கு நன்றி தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவு தாருங்கள். சோலைராஜாவிற்கு பாஜக நன்றிகடன் கடமைப்பட்டிருக்கிறது, என்றார்.

முன்னதாக, பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் பேசுகையில் : பாஜகவை விட களத்தில் நின்று போட்டியை நடத்தியவர் சோலை ராஜா. கபாடி போட்டி நியாயமாக நடைபெற்றுள்ளது. மோடி கபாடி என்பது புதிய வார்த்தையாக மாறியுள்ளது. உயர்தர பயிற்சி நிறுவனம் மயிலாடுதுறையில் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். இனிமேல் தமிழகத்தில் கபாடி விளையாடும் போது கபடி கபடி என்று உச்சரிப்பதற்கு பதிலாக, மோடி கபடி, மோடி கபடி என்று உச்சரித்து தான் விளையாடுவார்கள், என தெரிவித்துள்ளார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 504

    0

    0