‘டீசல் திருடச் சொன்னாங்க… மாட்டேனு சொன்னேன்.. அதுக்கு இப்படி பண்ணீட்டாங்க’ : உயிரிழந்த காவலரின் ஆடியோ லீக்!!
Author: Babu Lakshmanan7 பிப்ரவரி 2023, 4:47 மணி
டீசலை திருடி தருமாறு மூத்த அதிகாரிகள் கூறியும், அதனை செய்ய மறுத்ததால் தன்னை பணியிட மாற்றம் செய்ததாக தற்கொலை செய்து கொண்ட காவலர் பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை – ராயபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் முதல்நிலை காவலர் லோகேஷ் (39). இவருக்கு திருமணமாகி ஒரு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2003ம் ஆண்டு முதல் அமைந்தகரை, மணலி உள்பட பல்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றி வந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லோகேஷிற்கு உடல் நலகுறைவு ஏற்பட்டது, இதனால் பல மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார்.இதனிடையே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிளாக் மார்க் செய்யப்பட்டு, பெரவள்ளூர் காவல் நிலையம் குற்றப்பிரிவிற்கு லோகேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், பிளாக் மார்க் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அதேவேளையில், கணவனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, உடனடியாக பணியிட மாறுதலை ரத்து செய்து வடக்கு மண்டலத்தில் பணியிடம் ஒதுக்கி உத்தரவிட வேண்டும் என டிஜிபிக்கு அவரது மனைவி ஷாலினி மனு அளித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்றிரவு வீட்டின் கழிவறைக்கு சென்ற லோகேஷ் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, லோகேஷ் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைத்தனர்.
இந்த நிலையில், காவலர் லோகேஷ் துணை ஆணையருக்கு பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் உதவி ஆணையர் சம்பத் பாலன் ஆகியோர் தொடர்ந்து லஞ்சம் வாங்கி வருவதாகவும், சமீபத்தில் 100 லிட்டர் டீசலை திருடி கொடுக்குமாறு ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர் கூறியதை தான் மறுத்ததால் பழிவாங்கும் நோக்கில் தன்னை பணியிட மாற்றம் செய்ததாக குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும் ஒரு மாதத்திற்கு உதவி ஆணையர் ஐந்து லட்சம் ரூபாயும், காவல் ஆய்வாளர் ஒன்றை லட்சம் ரூபாயும் லஞ்சம் பெறுவதாகவும், இசெலான் மிஷினில் பல முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். உடனே பணியிட மாறுதலாகி செல்லுமாறு தினமும் வீட்டிற்கு காவலர்களை அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்துவதால், தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க ஆடியோவில் பேசியுள்ளார்.
தற்போது காவலர் லோகேஷின் மரணம் சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0