ஹிஜாப் அணிந்த ஆசிரியைக்கு இந்தி தேர்வு எழுத அனுமதி மறுப்பு : தேர்வு மையத்தில் இருந்து அனுப்பியதால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2023, 3:45 pm
சென்னையில் பாரத் இந்தி பிரசார சபாவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த சபாவின் சார்பில் ஆண்டுதோறும் இந்தி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு வகைகளில் 8 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் பாரத் இந்தி பிரசார சபா சார்பில் இன்று இந்தி தேர்வுகள் நடந்தன. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் ஏராளமானவர்கள் இந்த தேர்வை எழுதினர்.
திருவண்ணாமலை மாவட்டம் கோமாசிபாடி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியிலும் இந்த தேர்வு நடந்தது.
இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்று இந்தி மொழி தேர்வை எழுதினர். திருவண்ணாமலை கரிகாலன் தெருவை சேர்ந்த அரபு மொழி ஆசிரியர் ஷபானாவும் இந்த தேர்வை எழுத வந்தார்.
ஷபானா ஹிஜாப் அணிந்து வந்திருந்தார். அவர் தனது ஹால்டிக்கெட்டை காண்பித்து தேர்வறைக்கு சென்றார். அவருக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டது.
தேர்வும் தொடங்கிய நிலையில் 10 நிமிடம் கழித்து ஹிஜாப்பை அகற்றும்படி ஷபானாவிடம் கூறியுள்ளனர். ஹிஜாப் அணிவதை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம் என கூறியுள்ளார்.
இதையடுத்து ஹிஜாப்பை கழற்ற மறுத்ததாக கூறி அவர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியது.