இந்தி, இந்துத்துவா வாடை அடுத்த தேர்தலில் இருக்காது : காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஆரூடம்!!
Author: Udayachandran RadhaKrishnan25 November 2022, 6:56 pm
2024- தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி அப்போது இந்தி – இந்துத்துவா வாடை அடுத்த தேர்தலில் இருக்காது என மதுரையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை நேதாஜி ரோடு பகுதியில் உள்ள ஜான்சி ராணி பூங்காவில் இருக்கக்கூடிய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சிலைக்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பொதுமக்கள், மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்று வரவேற்பு அளித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்,
மாநில தலைமை அலுவலகத்தில் நடந்த சம்பவம் வருத்தம் அளிக்க கூடியது என்று கூறுகிறார்கள்.குழப்பம் ஏதுமில்லை.
தமிழக காங்கிரஸ் தலைவராக பணியாற்ற முழு தகுதியுடையவன் நான் என்று நினைக்கிறேன். அதற்கு ஆவலாகவும் உள்ளேன். நாகலாந்தில் நடைபெற்ற பொதுமக்களிடையிலான பேச்சுவார்த்தை தோல்வி காரணமாகவே பனிஷ்மென்ட் பொறுப்பில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர். என். ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
மக்களோடு மக்களாக கலந்த இயக்கம் காங்கிரஸ். பிஜேபி- யின் இந்து போக்கை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.
தேர்தல் வருவதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சி தயாராக இருப்போம். 2024- தேர்தலில் அதிக வாக்கு திமுக கூட்டணிக்கே இருக்கும். இந்தி-இந்துத்துவ வாடை அடுத்த தேர்தலில் இருக்காது. 2024 – தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று பேசினார்.