அறநிலையத்துறைக்கு ‘இதில்’ தான் கவனம்.. தென்காசி கோயில் முன்பு பற்றி எரிந்த தீ!

Author: Hariharasudhan
4 January 2025, 5:30 pm

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தென்காசி: தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் முன்பு, இன்று பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. பின்னர், தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக கடையம் அருகே உள்ள கேளையா பிள்ளையூரைச் சேர்ந்த ஆனந்த பாலன் (31) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், “தமிழகத்திலே பிரசித்தி பெற்ற கோவில் என்றால் உலகம்மை சமேத விஸ்வநாதர் வீற்றிருக்கும் தென்காசி விஸ்வநாதர் கோயில் ஆகும்.

புகழ்வாய்ந்த தென்காசி விசுவநாதர் ஆலயம் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்று வருகிறது.இந்த திருப்பணி வேலைகளுக்காகவும், கோவில் கோபுர வேலைகளுக்காகவும் மரங்கள் கொண்டுவரப்பட்டு சாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இன்று காலை ஒரு நபர் கையில் 10 லிட்டர் பெட்ரோலுடன் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து சாரம் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த மரங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீயை பற்ற வைத்து கோவிலை சேதப்படுத்த முயற்சி செய்துள்ளான். அந்த பகுதியில் உள்ள கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவனைப் பிடித்து தடுத்து அவன் பற்ற வைத்த தீயை அணைத்துள்ளனர்.

Hindu Munnani about Tenkasi temple front fire set

பின்பு காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சமீபத்தில் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலைதுறையின் கவனக்குறைவால் பல கோவில்களில் திருட்டும் பல கோவில் விக்ரகங்கள் சேதப்படுத்தியும் பல கோயில்களை இடித்தும் இழிநிலை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதுபோன்று சம்பவங்கள் நடந்து முடிந்த பின்பு குற்றம் செய்தவன் மனநோயாளி என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மனநிலை பாதிக்கப்பட்டவன் 10 லிட்டர் கேனை எடுத்துக்கொண்டு பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் வாங்கி வந்து சரியாக கோவிலுக்குள் நுழைந்து எப்படி பற்ற வைத்தான் இப்படி செய்பவன் மனநோயாளியாக இருப்பானா?

கோயிலை தாக்குபவன் அனைவரும் மன நோயாளி என்று கூறுவது. அப்பேர்ப்பட்ட அந்த மன நோயாளி வேற்றுமத ஆலயங்களை சேதப்படுத்தாமல் விட்டுவிட்டு இந்து கோயிலை மட்டும் சேதப்படுத்துவது சந்தேகத்தை எழுப்புகிறது. பல பேர் கோயிலை தாக்கிய பின்பு மனநல மருத்துவரை பார்த்து போலியான சான்றிதழ் வாங்குவதாக கேள்விப்படுகிறோம்.

இந்து சமய அறநிலைத்துறை கோயிலை நிர்வாகம் செய்வதாக கூறிக்கொண்டு இதுபோன்று நபர்களால் கோயில் சேதப்படுத்துவதையோ, சிலை திருட்டப்படுவதையோ, தடுப்பதற்கு வக்கற்ற துறையாக இருப்பது வேதனைக்குரிய விஷயம். அறநிலைத்துறை கோவிலை பாதுகாப்பதை விட்டுவிட்டு கோவிலில் உள்ள தங்கத்தை எப்படி உருக்குவது, உண்டியல் பணத்தை எப்படி பெருக்குவது, தரிசன கட்டணம் மூலம் எப்படி வருமானத்தை ஏற்படுத்துவது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறது.

கோவிலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன் வருவதில்லை. சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவிநாசி கோவிலில் ஒருவர் புகுந்து விக்கிரகங்களை சேதப்படுத்தினார் அவரும் மனநோயாளி என்றனர் அதேபோல பெரம்பலூர் மாவட்டத்தில் பல கோவில்கள் விக்கிரகங்கள் சேதப்படுத்தப்பட்டன. சேதப்படுத்திய நபரை பிடித்த போது மனநோயாளி என்றனர்.

இந்த நிலையில் கோவிலை காக்க தவறினால் கோயிலை விட்டு வெளியேறுவது நியாயமான விஷயம் இந்த நியாயமான விஷயத்தை இந்து சமய அறநிலைத்துறை செய்வதில்லை. பக்தர்கள் பெருமளவு பாதிக்கப்படுவது அதனை சரி செய்வதற்கான எந்த முயற்சியும் எடுக்காதது இந்த அரசின் அலட்சியமும் இந்து சமய அறநிலைத்துறையின் அலட்சியமும் ஆகும்.

இந்தத் துறைக்கு ஒரு அமைச்சர் தன் துறை தான் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுவதாக வாய்ச்சவடால் விடுவது இந்து பக்தர்களை எரிச்சல் அடையச் செய்கிறது. அனைத்து கோயில்களிலும் பரம்பரை காவலாளிகள் என்று முன் காலத்தில் இருந்தது அவர்களுக்கு சரியாக கூலி வழங்கி பாதுகாக்க தவறியதால் அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக வேறு தொழில் செய்ய சென்று விட்டனர்.

இதையும் படிங்க: மாணவி சொன்ன வாக்குமூலத்தை பொய்யாக்குகிறதா திமுக அரசு? அண்ணாமலை குற்றச்சாட்டு!

அதன் பின்பு இந்து சமய அறநிலைத்துறை காவலாளிகளை பல கோயில்களில் நியமிக்கவில்லை. இதனால் தான் இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன. காவல்துறையும் இது போன்ற நபர்களை மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று வழக்கு பதியாமல் விட்டு விடுவதன் காரணமாக இந்த செயல் தொடர்கிறது.

இந்த தென்காசி கோயில் தீ வைப்பு சம்பவம் யாருடைய தூண்டுதலில் நடந்தது என்பதை காவல்துறை விசாரிக்க வேண்டும். இதன் பின்புலம் என்ன? உள்நோக்கம் என்ன? என்பதை மக்களுக்கு விளக்கும் படியாக விசாரணை அமைய வேண்டும். தமிழக அரசு இனிவரும் காலங்களில் கோவிலைப் பாதுகாக்க அனைத்து கோயில்களிலும் காவலாளிகள் நியமித்து சரியான முறையில் நிர்வாகிக்க வேண்டும். என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 107

    0

    0

    Leave a Reply