கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பேனரில் இடம்பெற்ற சாமி படம்… கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு…

Author: Babu Lakshmanan
8 March 2023, 4:47 pm

கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணைப்படி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கமிட்டி உறுப்பினர்களான குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், சுகி சிவம் உள்ளிட்டோர் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இந்து ஆர்வலர்கள், சிவனடியார்கள் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியவுடன் சிலர் மேடை அருகில் சென்று இந்து அறநிலையத்துறை கூட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரில் இந்து கடவுள் படம் இடம்பெறவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, பல்வேறு இந்து அமைப்பினர் கடவுள் படம் வைக்கக்கோரி கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் இரு தரப்பினரிடைய கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் போலீசார் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். இதற்கிடையில், இந்து அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று மேடையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கடவுள் படம் மாட்டப்பட்டது.

தொடர்ந்து கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு செய்யாமல் வேறு எங்கு சென்று செய்வது என தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி பேசினர். ஆகம விதிகள் அதற்கு இடம் கொடுக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, இந்து அமைப்புகள், சிவனடியார்கள், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் மாணிக்கவாசகர் பாடிய பாடல்களிலேயே, ஆகம விதிப்படி மட்டுமே குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அவ்வாறு இருக்க தமிழ் பாடல்களை அதில் எவ்வாறு சேர்க்க முடியும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுகி சிவம் பேசும்போது, தேவாரம், திருவாசகம் பாடல்களில் உள்ள எந்தெந்த வரிகளை எந்தெந்த பாடல்களை தமிழ் குடமுழக்கின் போது சேர்க்கலாம் என பேசிய நிலையில், மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்து அமைப்புகள் மேடையின் முன்பு வந்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், தமிழ் மற்றும் இந்து அமைப்புகள் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து காவல்துறையினர் இரு தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய கமிட்டி உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை கடிதம் மூலமாக தற்போது தரலாம் அல்லது கடிதங்களை அறநிலையத்துறை அலுவலகங்களுக்கு அனுப்பலாம் என அதற்கான விலாசங்களையும் தெரிவித்தனர்.

கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் வெவ்வேறு கோரிக்கைகளை வைத்து முழக்கமிட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  • taapsee pannu said to vetrimaaran that one national award is pending for her என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…