பிரபல தனியார் அரிசி ஆலையில் 7 டன் ரேஷன் அரிசி பதுக்கல் : ஆய்வு செய்த அதிகாரிகள் அதிர்ச்சி… அரிசி ஆலை அதிபர் தலைமறைவு!!
Author: Udayachandran RadhaKrishnan8 August 2022, 11:14 am
மதுரை : திருமங்கலம் அருகே ரைஸ் மில்லில் பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்த அதிகாரிகள் தலைமறைவான அரிசி ஆலை அதிபரை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழக்கோட்டைக்கு கிராமத்தில், செந்தில் என்பவருக்கு சொந்தமான ரைஸ் மில் இயங்கி வருகிறது. இந்த ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்துள்ளதாக திருமங்கலம் வட்டாட்சியர் சிவராமனுக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் , ஆய்வு செய்த சிவராமன் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கு டன் ரேஷன் அரிசி மூடைகளையும் பறிமுதல் செய்தார். அப்போது ரைஸ்மில் அதிபர் அங்கிருந்து தலைமறைவானார்.
இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, உசிலை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அவ்வழியே வந்த மினி லாரியில் ரேஷன் அரிசி பதுக்கி வந்தது தெரிய வந்ததையடுத்து, அதனையும் பறிமுதல் செய்து உணவு பொருள் தடுத்தல் பிரிவு துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
மினி லாரி ஓட்டுநரும் லாரியிலிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து திருமங்கலம் வட்டாட்சியர் காவல் துறையில் புகார் அளித்து வாகன ஓட்டுநர்களை தேடி வருகின்றனர்.