ஒசூர் சங்கராபீடம் விஜயேந்திரபுரி கார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு… கோவையில் பரபரப்பு… போலீசார் விசாரணை..!!
Author: Babu Lakshmanan19 May 2022, 10:31 pm
கோவை க.க.சாவடி அருகே காரில் வந்த ஒசூர் சங்கராபீடம் சவுபர்நிகா சங்கர விஜயேந்திரபுரி கார் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட சவுபர்நிகா சங்கர விஜேந்திரபுரி சுவாமிகள் ஒசூரில் ஆன்மீக மடம் அமைத்து ஆன்மீக சேவையாற்றி வருகிறார். இந்த நிலையில் கோவையில் மடம் அமைப்பதற்காக கோவை கந்தேகவுண்டன் சாவடிக்கு உட்பட்ட மாவுத்தம்பதி கிராமத்தில் இடம் வாங்கி, கோவில் மற்றும் மடம் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக சவுபர்நிகா சங்கர விஜேந்திரபுரி சுவாமிகள் கடந்த ஐந்து மாதங்களாக கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து, மாவுத்தம்பதியில் நடைபெற்று வரும் கோவில் திருப்பணிகளையும், மடத்தின் கட்டிட பணிகளையும் கவனித்து வருகிறார். மேலும், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் திருப்பணிகள் நடைபெற்றுவரும் பகுதியிலேயே தங்கியதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் சவுபர்நிகா சங்கர விஜேந்திரபுரி சுவாமிகள் தங்கியிருந்த வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த காரின் மீது நாட்டு வெடிகுண்டு போன்ற மர்ம பொருளை வீசிச் சென்றுள்ளனர். மர்ம நபர்கள் வீசிச்சென்ற பொருட்கள் நாட்டு வெடிகுண்டு போன்ற தோற்றத்தில் இருந்த மர்மபொருட்கள் வெடிக்காமல் சாமி தங்கியிருந்த இடத்தில் கிடப்பதை அங்கு இருந்தவர்கள் பார்த்ததாக தெரிகிறது.
இதையடுத்து கோவை கந்தேகவுண்டன் சாவடி காவல் நிலையத்தில் புகாரளித்ததை அடுத்து மர்மபொருட்களை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் மர்நபர்கள் வீசிச்சென்றது தீபாவளிக்கு பயன்படுத்தும் பட்டாசு என்பது தெரியவந்துள்ளது. மேலும் தீபாவளி பட்டாசு என்பதை உறுதிபடுத்திய போலீசார் அதை வீசிச்சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடிவருகிறார்கள்.