கோவையின் ஹாட் டாப்பிக்காக மாறிய ஹாட் பாக்ஸ் : திமுகவினர் பதுக்கி வைத்திருந்த 1000 ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல்!!
Author: Udayachandran RadhaKrishnan17 February 2022, 8:02 pm
கோவை : கோவை 80 ஆவது வார்டில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1000 ஹாட் பாக்ஸ்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 80 ஆவது வார்டு அசோக் நகர் கோவிந்த சாமி லே அவுட்டில் புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டில் அட்டை பெட்டிகளில் ஹாட் பாக்ஸ்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.
ஹாட் பாக்ஸ் வைக்கப்பட்டிருப்பது குறித்து பாஜகவினர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த, தெற்கு மண்டல தேர்தல் பறக்கும் படை அதிகாரி அருண் மற்றும் காவல் துறையினர் ஹாட் பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட ஹாட் பாக்ஸ்களின் மதிப்பு 35 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு ஹாட் பாக்ஸின் விலை 349 ரூபாய் என அச்சிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 அட்டை பெட்டிகளில் 960 ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.