பாதை கொடுக்காததால் ஆத்திரம்.. வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளி அடாவடி… பெண்கள் மீதும் தாக்குதல் ; பகிர் கிளப்பும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
27 January 2024, 12:29 pm

வாணியம்பாடி அருகே வீட்டின் சுற்று சுவரை இடித்து தள்ளி பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமம், முருக்கன் குட்டை வட்டம் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி பிரகாசம். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவருடைய விவசாய நிலத்திற்கு பின்புறம் செல்வராஜ், ராணி, அப்பு, அஜய் ஆகியோரின் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் உள்ளன. விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு செல்ல வழி இல்லாததால், காலம் காலமாக பிரகாசம் நிலத்தின் வழியாக வரப்பு பாதை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக செல்வராஜ், ராணி, அப்பு, அஜய் ஆகியோர் தங்களின் நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு செல்ல பிரகாசமிடம் வரப்பு பாதைக்கு பதிலாக கார் செல்லும் அளவுக்கு பொது வழி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

வழி கொடுக்க பிரகாசம் மறுத்ததால் கார்த்தி என்பவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அடியாட்கள் உடன் 2 ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் டிராக்டர் கொண்டு வந்து பிரகாசம் வசித்து வந்த வீட்டின் சுற்று சுவர் இடித்து தரைமட்டம் செய்தும், வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் 2 பெண்கள் காயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பிரகாசம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டின் சுவர் இடித்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும், பிரகாசம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சுற்று சுவரை இடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 611

    0

    0