ஒரே ஆடையில் ஓராண்டில் 30 பயணங்கள்.. ரன்யா ராவ் சிக்கியது எப்படி? விசாரணை வலையில் Ex DGP!

Author: Hariharasudhan
6 March 2025, 5:54 pm

தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு: கடந்த மார்ச் 3ஆம் தேதி நள்ளிரவு துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் 14.8 கிலோ தங்க நகையை மறைத்து எடுத்து வந்த பிரபல கன்னட நடிகை ரன்யா ராவை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பிடித்தனர். இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதன் அடிப்படையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரன்யா ராவ், மார்ச் 18ஆம் தேதி வரை காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, துபாயில் இருந்து பெங்களூருக்கு வரும் எமிரேட்ஸ் விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மார்ச் 3ஆம் தேதி வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போதுதான் 14.8 கிலோ தங்க நகையை ரன்யா ராவ் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இதன் மதிப்பு 12.56 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, பெங்களூருவில் இருக்கும் ரன்யா ராவின் வீட்டில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது 2.6 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும், 2.67 கோடி ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Ranya Rao arrested

இவ்வாறு தற்போது வரை ரன்யா ராவிடம் இருந்து 17.29 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கடந்த 15 நாட்களில் மட்டும் இவர் 4 முறை துபாய்க்கு சென்று வந்துள்ளார். அதோடு, கடந்த ஓராண்டில் மட்டும் 30 முறை துபாய்க்குச் சென்று வந்துள்ளார்.

மேலும், அவர் எப்பொழுதெல்லாம் துபாய்க்கு பயணம் செய்கிறாரோ, அப்பொழுதெல்லாம் ஒரே ஆடையை அணிந்து சென்று வந்துள்ளார். இந்த முறை அவர் தனது தொடையில் தங்கத்தை ஒட்ட வைத்துக் கடத்தி வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: வாய்க்கால் தகராறு.. ஜாமீனில் வந்த பாஜக நிர்வாகி மீண்டும் கைது!

இந்த நிலையில், ரன்யாவின் தந்தையும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான கே.ராமச்சந்திர ராவ் இது குறித்து தனியார் ஆங்கில நாளிதழிடம் அளித்த பேட்டியில், “ரன்யா ராவ் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு எங்களைச் சந்திக்கவில்லை. அவரது கணவர் அல்லது அவரது தொழில் குறித்து எதுவும் தெரியாது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற டிஜிபி ராவ் மீது, கேரளாவைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருவர், மைசூர் போலீசார் தனது 2 கோடி ரூபாயை முறைகேடாக பறிமுதல் செய்ததாக குற்றம் சாட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது. எனவே, இந்த தங்கக் கடத்தலில் ரன்யா ராவ் தந்தையையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

  • Aadukalam movie casting controversy என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!
  • Leave a Reply