புகாரளித்த அன்றே 2 முறை பிடிபட்ட ஞானசேகரன்.. வீட்டில் கிடந்த தொப்பி.. வெளிவந்த திடுக் தகவல்கள்!
Author: Hariharasudhan26 December 2024, 6:01 pm
மாணவி புகார் அளித்த அன்றே ஞானசேகரனைப் பிடித்து, பின்னர் விடுவித்தது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
சென்னை: கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இரவு, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது, தற்போது கைது செய்யப்பட்டு உள்ள ஞானசேகரன், போலீசிடம் சிக்காமல் இருக்க தனது செல்போனை பிளைட் மோடில் (flight Mode) வைத்து வீடியோ எடுத்து உள்ளார்.
அது மட்டுமல்லாமல், மற்றொரு நபரிடம் பேசுவது போலவும் நாடகமாடி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து, மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்துள்ளார். இதனையடுத்து, மறுநாளான டிசம்பர் 24ஆம் தேதி காலை, தோழிகள் உதவியுடன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் கொடுத்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பல்கலைக்கழகத்தில் சந்தேகப்படும்படியான நபர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், எழுத்துப்பூர்வமாகவும் மணவி புகார் அளித்துள்ளார். குறிப்பாக, சம்பவம் நடந்த இடம் இருட்டான பகுதி என்பதால், அங்கு ஞானசேகரனின் முகம் சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவாகவில்லை.
ஆனால், முகத்தை மூடிய நிலையில் அவர் சென்றுள்ளார். இதனையடுத்து, போலீசார் இதேபோல் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யும் பாணியில் உள்ள பழைய குற்றவாளியான ஞானசேகரனைப் பிடித்து, சந்தேகத்தின் பெயரில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் அந்த குறிப்பிட்ட நேரத்தில் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்திருந்ததும், பின்னர் செல்போனில் இருந்த தடயங்கள் அழிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு செல்போனை பறிமுதல் செய்து போலீசார், ஞானசேகரனை அனுப்பி உள்ளனர்.
தொடர்ந்து, போலீசார் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தபோது, ஞானசேகரன் தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல், டவர் டம்ப் முறையில் சோதனை செய்தபோது, ஞானசேகரன் பல்கலைக்கழகத்திற்குள் சென்றதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: சுடுகாட்டுக்கே கூட்டிச் சென்ற சுடுதண்ணீர்.. இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!
இதன் பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் உள்ள தரவுகளை ரெக்கவரி செய்த போது, அதில் பாதிக்கப்பட்ட மாணவியின் வீடியோ இருப்பதும், மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, அதையும் வீடியோ பதிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, ஞானசேகரின் வீட்டை சோதனை செய்த போது, குற்றத்தில் ஈடுபடும் போது அணிந்திருந்த அதே தொப்பி மற்றும் கருப்புச் சட்டை இருந்ததைக் கண்டு போலீசார், ஞானசேகரனை கைது செய்து உள்ளனர். போலீசார் தன்னைக் கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்து ஞானசேகரன் தப்பிக்க முயற்சிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.