சம்பள பாக்கி வைத்த நிறுவனம்.. பெண் தூய்மைப் பணியாளர் விபரீத முடிவு!
Author: Hariharasudhan17 March 2025, 1:16 pm
சென்னையில், வேலை செய்ததற்கான சம்பள பாக்கி தராமல் இழுத்தடித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக HR மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: சென்னையின் வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சுமதி(37). இவர் தூய்மைப் பணியாளர் ஆவார். இந்த நிலையில், இவர் சமீபத்தில் தி.நகர் பிரகாசம் தெருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டார். ஆனால், பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே பெண் பணியாளர் வேண்டாம், ஆண் பணியாளர்தான் வேண்டும் என நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
எனவே, சுமதி பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், அவர் பணி செய்த நாட்களுக்கான சம்பளம் கொடுக்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டுள்ளது. மேலும், பலமுறை கேட்டும் சுமதிக்கான நிலுவைச் சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர், கடந்த மார்ச் 4ஆம் தேதி மாலை, சம்பந்தப்பட்ட அலுவலக நுழைவாயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

இதனால் உடல் முழுவதும் பலத்த தீக் காயத்துடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், மார்ச் 13ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.
இதையும் படிங்க: பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. 3 பேரை சுற்றி வளைத்த போலீஸ்..!!
இந்த நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன மனிதவள மேலாண்மை மேலாளரான பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த பிரீத்தி (40) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக டெல்லி சென்றிருந்த அவரை அங்கு சென்று போலீசார் கைது செய்தனர்.