அரைமணி நேரத்தில் ஆறு பிரியாணி.. ஹோட்டல் மேலாளர் மீது வழக்கு..!
Author: Vignesh30 August 2024, 9:04 am
கோவையில் பிரியாணி போட்டி நடத்திய உணவகத்தின் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் ரயில் நிலையம் அருகே உள்ள போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் உணவகத்தின் சார்பாக கடந்த புதன்கிழமை பிரியாணி போட்டி ஒன்று நடத்தப்பட்டது. ஆறு பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் பரிசும் , ஐந்து பிரியாணி சாப்பிட்டால் 50 ஆயிரம் பரிசு, மூன்று பிரியாணி சாப்பிட்டால் 25 ஆயிரம் பரிசும், என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
இப் பிரியாணி போட்டியில் பங்கேற்பதற்காக கோவை மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் வந்தனர். கோவை மாநகரின் முக்கிய பகுதியிலான அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை மாநகர கண்காணிப்பாளர் அலுவலகம், கோவை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகம், போன்றவை இணைக்க கூடிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று போக்குவரத்து போலீசார் அனுமதியின்றி நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர். எவ்வித முன் அனுமதி இன்றி பொது இடத்தில் பொது மக்களை கூட்டி போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக பிரியாணி போட்டி நடத்திய போச்சே புட் எக்ஸ்பிரஸ் உணவகத்தின் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பந்தைய சாலை காவல் நிலையம் ஆய்வாளர் அர்ஜுன் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் உணவகத்தின் மேலாளர் கணேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதமும் போக்குவரத்து போலீசார் விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.