வேறு பெண்ணை திருமணம் செய்த கணவன்.. காவல் நிலையம் முன்பு மனைவி தர்ணா.. பேச்சுவார்த்தை நடத்திய பெண் போலீஸார்..!!

Author: Babu Lakshmanan
14 July 2023, 12:41 pm

திருச்சி; திருச்சி அருகே கணவன் வேறு பெண்ணை திருமணம் செய்ததால் புகார் கொடுத்தும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காவல் நிலையம் முன்பு மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தும்பலம் பெருமாள் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசி (23). இதே ஊரைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (29) என்பவரை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர் கலையரசிக்கு தெரியாமல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கலையரசி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த மூன்று மாத காலமாக காவல் நிலையத்திற்கு அலைந்த இளம் பெண் கலையரசி, முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய வாசல் முன்பாக இன்று காலை அமர்ந்து கணவன் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் இல்லாத நிலையில் மகளிர் காவல் நிலையத்தில் இருந்த பெண் போலீசார், இளம் பெண் தர்ணா போராட்டத்தினால் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முசிறியில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் கோகிலா மற்றும் பிரியா போராட்டத்தில் ஈடுபட்ட கலையரசியை சமாதானப்படுத்தி காவல் நிலையத்திற்கு உள்ளே அழைத்துச் சென்று விசாரணை செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து கலையரசி தர்ணா போராட்டத்தை கைவிட்டார். கணவர் மீது நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்து இளம் பெண் காவல் நிலையம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 312

    0

    0