கர்ப்பிணியின் வயிற்றில் அமர்ந்து கொடூர கொலை.. சிசுவும் உயிரிழந்த சோகம்.. போதை செய்த சம்பவம்!
Author: Hariharasudhan22 January 2025, 3:59 pm
தெலுங்கானா, ஹைதராபாத்தில் மது போதையில் கர்ப்பிணியின் வயிற்றில் அமர்ந்து அவரைக் கொலை செய்துவிட்ட நிலையில், சிசுவும் வெளியேறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், கச்சிக்குடா பகுதியில் வசித்து வருபவர் சத்ய நாராயணா (21) – சினேகா (21) தம்பதி. இவர்களுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகளே ஆகிறது. இந்த நிலையில், சினேகா 7 மாத கர்ப்பமாக இருந்தார்.
இதனிடையே, போதைக்கு அடிமையான நாராயணா, அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்வதையும், அவரைத் தாக்குவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று தனது மனைவியை கட்டாயப்படுத்தி தாக்கிய சத்ய நாராயணா, அவரை மதுபானமும் அருந்த வைத்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், போதையின் உச்சத்திற்கு சென்ற சத்ய நாராயணா, சினேகாவின் வயிற்றில் அமர்ந்து, தலையணையால் முகத்தை அழுத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தின் போது, சினேகாவின் வயிற்றில் இருந்த சிசு வெளியேறி, குழந்தையும் உயிரிழந்து உள்ளது.
மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், குழந்தை தனக்கு பிறந்திருக்காது என்ற எண்ணத்தில் கொலை செய்ததாகவும் போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.