கொஞ்சம் கூட யோசிக்கல.. மனைவியை கிணற்றில் தள்ளிய கணவன்… எதிர்பாரா டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan26 April 2025, 10:59 am
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு தட்சு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி சத்தியபிரியா (33) என்ற மனைவியும், மோனிஷ்ராம் (12), ஸ்ரீராம்பிரகாஷ் (10), சஷ்வந்த் (7) என்ற 3 மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் 13 வருடங்கள் ஆன நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!
சத்தியபிரியா நடவடிக்கை மீது சக்திவேலுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று மதியம் தோட்டத்தில் சத்தியபிரியா கிணற்றுக்கு அருகில் நின்று செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த கணவர் சக்திவேல் யாருடன் செல்போனில் பேசுகிறாய் என மனைவியை பார்த்து கேட்டதால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சக்திவேல் சத்திய பிரியா கையில் இருந்த செல்போனை பிடுங்குவதற்காக முயற்சித்தபோது இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கிணற்றுக்கு அருகில் நின்று செல்போனை இருவரும் இழுத்தபோது ஏற்பட்ட தகராறில் மனைவி சத்தியபிரியாவை கிணற்றுக்குள் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அப்போது சுமார் 85 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்த சத்தியபிரியா தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இதனை பார்த்து தா.பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், முசிறி தீத்தடுப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் முசிறி தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கர்ணன் தலைமையில் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் சடலமாக கிடந்த சத்தியபிரியா உடலை மீட்டனர். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்லதுரை சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சத்தியபிரியா உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.