நிலத்தை அபகரித்த திமுக பெண் பிரமுகரின் கணவர் : கண்டுகொள்ளாத போலீஸ்.. குடும்ப உறுப்பினர்கள் 12 பேருடன் தீக்குளிக்க முயற்சித்த விவசாயி.. !
Author: Udayachandran RadhaKrishnan2 May 2022, 4:48 pm
திண்டுக்கல் : திமுக பெண் பஞ்சாயத்து தலைவரின் கணவர் தங்களது நிலத்தை ஆக்கிரமித்து விட்டதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 நபர்கள் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. விவசாயியான இவருக்கு அதே பகுதியில் இரண்டு ஏக்கர் பூர்வீக நிலம் உள்ளது.
காப்பிலியபட்டி பெண் பஞ்சாயத்து தலைவர் திமுகவினை சேர்ந்த சிவபாக்கியம். இவரது கணவர் ராமசாமி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ராமசாமி, மாரிமுத்துவுக்கு சொந்தமான நிலத்திற்கு அருகே 30 ஏக்கர் நிலத்தை தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து வாங்கி வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்காக தயார்படுத்தி வருகிறார்.
அந்த நிலத்திற்கு செல்வதற்காக பாதை இல்லாத காரணத்தினால் மாரிமுத்துவுக்கு சொந்தமான பூர்வீக இரண்டு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து பாதை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் வேதனை அடைந்த மாரிமுத்து தனது அண்ணன் அண்ணி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் மாவட்ட காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நில அபகரிப்பு குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையே கடந்த 27ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். முதல்வரின் தனி பிரிவிற்கும் இந்த புகார் சென்றுள்ளது.
அதன் பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் 3 கேன்களில் தாங்கள் கொண்டு வந்திருந்த மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றனர்.
அங்கிருந்த போலீசார் அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேன்களை பறித்து காப்பாற்றினர். பின்னர் 12 பேரையும் தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
நில அபகரிப்பு புகார் தெரிவித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 நபர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0