அந்த ஆடியோவில் பேசியது நான்தான்… இனியும் பேசுவேன் : ரிலீஸ் பண்ணும் போது எடிட் பண்ணாம வெளியிடுங்க திமுக நண்பர்களே : அண்ணாமலை!!
Author: Udayachandran RadhaKrishnan30 August 2022, 3:54 pm
அந்த ஆடியோவில் பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ உண்மைதான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சேலத்தில் இருந்து சென்னை வரையிலான 8 வழித் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழக முதல்வர் மக்களுக்கு நேரடியாக விளக்க வேண்டும். திட்டம் குறித்து தற்போது அவர்களது மனது மாறியிருக்கிறதா? மாறியிருந்தால் ஏன் மாறியிருக்கு? அப்படியிருந்தால் மத்திய அரசு கொண்டுவந்த நிறைய திட்டங்களை எதற்காக எதிர்த்தார்கள்? –
இதுதொடர்பாக தமிழக முதல்வர் நேரடியான ஒரு விளக்கத்தை கொடுப்பார் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனை முதல்வர் கொடுக்க வேண்டும்.
இதே பிரச்சினை பரந்தூர் விமான நிலையத்திற்கும் உள்ளது.திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே சென்னைக்கு இரண்டாவதாக ஒரு விமான நிலையம் வேண்டும் என்று கூறியுள்ளனர். ஒரு மாநிலத்திற்கு நிறைய விமான நிலையங்கள் வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
இதையடுத்து அமைச்சர் கார் மீது காலணி வீச்சு விவகாரம் தொடர்பான வெளியான ஆடியோ குறித்து பேசிய அவர், அந்த ஆடியோவில் பேசியது நான்தான். அதில், “எனது ஸ்டைல் வெளிப்படையான அரசியல் தான். ஒருவர் தவறு செய்யும்போது அதில் வெளிப்படையாக அரசியல் செய்யவேண்டியது எனது கடமை. எனது நிலைப்பாடு பாஜகவினர் அமைச்சரை எதிர்த்து தர்ணாவில் ஈடுபட்டிருக்க வேண்டும். அது அரசியல். யாரோ சிலர் செருப்பு எடுத்து வீசியதால், அந்தப் பிரச்சனை வேறு மாதிரியாக மாறிவிட்டது.
நான் பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ உண்மை. ஆடியோவில் திமுகவினர் ஒரு சில வார்த்தைகளை நீக்கியும், சேர்த்தும் வெளியிட்டுள்ளனர். தலைவர்களிடம் நான் பேசுவதை வெட்டியும், ஒட்டியும் வெளியிடுகிறார்கள் என்பதற்காக நான் ஒருவரிடம் பேசுவதை நிறுத்திக்கொள்ள முடியாது. அதனை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்பேன். அந்த ஆடியோவை திமுகவினர் முழுமையாக வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
0
0