கரண்ட் எப்போ வரும்னு அமைச்சர் கிட்ட கேட்டாதா தெரியும் : நுகர்வோருக்கு மின் வாரிய ஊழியரின் அலட்சிய பதில்.. வைரலாகும் ஆடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2022, 1:42 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கத்தினால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில், வடசேரி, வெட்டூர்ணிமடம், களியங்காடு, கோணம், பார்வதிபுரம் பகுதிகளில் நேற்று இரவு 7 மணியளவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.

சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக மின்சாரம் வராததால் மாணவ-மாணவிகள் தேர்வுக்கு படிக்க முடியாமல் அவதிப்பட்டனர். குழந்தைகள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மின்விசிறிகளை இயக்க முடியாமல் அவதிக்கு உள்ளானார்கள்.

கோட்டார் பகுதியில் இரவு 10 மணிக்குப்பிறகு மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் வணிக நிறுவனங்கள், கடை ஊழியர்களும் பரிதவிப்புக்கு ஆளானார்கள். இதேபோல் குலசேகரம், வெண்டாலி கோடு, மாமூடு, பொன்மனை, திற்பரப்பு, திருநந்திக்கரை பகுதிகளில் மாலை 6 மணிக்கு சென்ற மின்சாரம் இரவு 11 மணிக்குத்தான் வந்தது. 5 மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

குமரி மேற்கு மாவட்ட பகுதியில் மின்தடை ஏற்பட்டதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மின்வாரிய ஊழியரிடம், மின்சாரம் எப்போது வரும் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ஊழியர், மின்சாரம் எப்போது வரும் என்று எங்களுக்கு தெரியாது.

மந்திரிகளிடம் தான் போய் கேட்க வேண்டும் என்று பதில் அளித்தார். மின்வாரிய ஊழியரின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் மின்தடை குறித்து பல்வேறு கருத்துக்களும் பரிமாறப்பட்டு வருகின்றன.

மின்தடை குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மின் தட்டுப்பாடு காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி