லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகத்தை கொடுக்கிறேன் : சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய தன்னார்வலர் சித்ரா வாக்குறுதி!!
Author: Udayachandran RadhaKrishnan10 February 2022, 11:58 am
கோவை : லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகத்தை வழங்குவதாகவும், பணிக்காலத்தில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெறாமல் மக்கள் சேவை செய்வேன் என்று உறுதி அளித்து மக்களிடம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் கோவை 51வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சித்ரா.
கோவை சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மனைவி சித்ரா. பி.எஸ்.சி பட்டதாரியான இவர் தனது குடும்ப அறக்கட்டளையான “அம்மன் அடிமை” என்ற அறக்கட்டளை மூலம் பிரதிபலன் பாராது பல ஆண்டுகளாக மக்கள் பணி செய்துள்ளார்.
இந்த நிலையில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக களம் காண்கிறார் சித்ரா. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 51வது வார்டில் தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிடும் இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சித்ரா பரப்புரை மேற்கொள்ளச் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் இவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே 51வது வார்டு ஈஸ்வரன் கோவில் வீதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில் ” என்னை வெற்றி பெற வைத்தால் லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத நிர்வாகத்தை கொடுத்து, 51வது வார்டு மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வேன். ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெறாமல் மக்களுக்காக சேவை செய்வேன். குப்பைகள் இல்லாத, நேர்மையான நிர்வாகத்திற்காக தண்ணீர் குழாய் சின்னத்திற்கு வாக்களித்து மக்கள் ஆதரவு கொடுங்கள்” என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.