என்னை சுட்டு வீழ்த்தினாலும் உயிரே போனாலும் நடத்திக் காட்டுவேன் : அரசியலும், ஆன்மீகமும் வேறு அல்ல.. மதுரை ஆதீனம் ஆவேசப்பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 May 2022, 2:41 pm

மதுரை : தருமபுர ஆதின பட்டின பிரவேச நிகழ்வை உயிரைக்கொடுத்தாவது நடத்துவோம் என மதுரை ஆதினம் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதின மடத்தில் நூற்றாண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் விழாவை இந்த வருடம் அரசு தடை செய்துள்ளது.

இது சம்பந்தமாக 293வது மதுரை ஆதினம் 293வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேட்டி அளித்தார்.

அவர் பேசுகையில், நான் தருமபுர ஆதினத்தில் தான் படித்தேன். தருமபுர ஆதினத்தில் தேவார பாடசாலை, சைவபெறி பாடசாலை அமைக்கப்பட்டு அறம் வளர்க்கப்பட்டது.

தமிழ்மொழி வளர்ப்பையும், வைசத்தையும், தமிழையும் பாதுகாக்கும் ஆதினம் தருமபுர ஆதினம். பட்டின பிரவேச நிகழ்ச்சி 500ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரியம்.

கவர்னர் விவகாரம் தான் பட்டின பிரவேச நிகழ்ச்சி ரத்துக்கு காரணம். பட்டின பிரவேச நிகழ்ச்சி காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்தது. ஜனாதிபதியே விரும்பிய ஆதினம் தருமபுர ஆதினம்.

வெள்ளைக்காரர்கள் ஆட்சி மற்றும் கலைஞர் ஜெயலலிதா காலத்தில் கூட இது நடந்தது. இதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும். தற்போது தடை விதிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.

தமிழக முதல்வர் ரகசிய காப்பு பிரமானம் எடுக்கிறார். அதை எடுக்கக்கூடாது என சொல்லக்கூடாதோ? அது போலத்தான் இந்நிகழ்ச்சி. பாரம்பரிய நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கூடாது.

திருநாவுக்கரசர் பல்லக்கை திருஞானசம்மந்தர் சுமந்துள்ளார். உயிரைக் கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதின பட்டின பிரவேசத்தை நடத்துவோம். பட்டின பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும்.

தருமபுர ஆதினம் மற்றும் திருவாடுதுறை ஆதினத்தில் பட்டின பிரவேச நிகழ்ச்சி வருடாவருடம் நடக்கும். தருமபுரம் பட்டினபிரவேசத்தை முதல்வரே நேரில் வந்து நடத்த வேண்டும்.

முதல்வர் இந்நிகழ்ச்சியை நடத்த கோரிக்கை விடுக்கிறேன். அரசு உடன்படவில்லையென்றால் சொக்கநாதரிடம் சொல்வேன். நானே சென்று தருமபுர ஆதின பல்லக்கை சுமப்பேன் உயிரே போனாலும் பரவாயில்லை.

நான் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடியவன். அரசியல் வேறு ஆன்மிகம் வேறு அல்ல. பாரம்பரியமாக நடைபெறும் பட்டினபிரவேச நிகழ்ச்சியை நடத்த அரசு உதவி செய்ய வேண்டும்.

அரசு உத்தரவின் பேரில் பாரம்பரியமாக நடைபெறும் தருமபுர ஆதின பட்டின பிரவேச நிகழ்வை நடத்த வேண்டும். சிலர் எதிர்ப்பதற்காக பாரம்பரிய நிகழ்வை எப்படி தடை செய்யலாம். என்னை வேண்டுமானால் சுடட்டும்.

மனிதர்களை மனிதர்களே தூக்குவது இல்லை இது குருவை சிஷ்யர்கள் தூக்கிச்செல்கிறோம். தமிழ்த்தாய் கொலுவிருக்கும் இடம்தான் ஆதினம். எப்படி போப்பாண்டவரை போய் சந்திக்கிறார்களோ அது போலத்தான் தமிழ் சைவ நெறிக்கு ஆதினங்கள் உள்ளதாக தெரிவித்தார்.

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணிக்கு இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கக்கூடாது என கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!