அதிமுகவுக்கு விரைவில் தலைமை ஏற்பேன்.. சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என கூறுபவர்கள் உண்மையான அதிமுகவினர் கிடையாது : சசிகலா!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2022, 5:28 pm

விழுப்புரம் : அதிமுக கொடியை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என சொல்பவர்கள் உண்மையான அதிமுகவினர் இல்லை என திண்டிவனத்தில் நடைபெற்ற திருமண விழாவில் சசிகலா பேசியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுக முன்னாள் நகர துணைத் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் முகமது ஷெரீப் அவர்களின் மகள் திருமண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமையை ஏற்று திருமண விழாவை சசிகலா நடத்தி வைத்தார்.

விழாவில் அவர் சசிகலா பேசியதாவது.. நான் அதிமுகவை வழிநடத்தும் காலம் வந்து கொண்டிருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்படுவர் யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவில் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்பேன்.

உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சிறந்த ஆட்சியை நான் வழங்குவேன். அதிமுக கட்சி கொடியையும், சின்னத்தையும் நாம் பயன்படுத்த கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி கூறுபவர்கள் அதிமுகவுக்கு எதிரானவர்கள். திமுகவை வளர்க்க வேண்டும் என செயல்படுபவர்கள் என்று பேசினார்.

மேலும் இரண்டு பெண்மணிகள் ஆக இருந்த நாங்கள் திமுகவில் அப்போது கருணாநிதியை பார்த்தவர்கள் நாங்கள். எங்களை ஒன்றும் பண்ண முடியாது எனவும் அவர் பேசினார். அதிமுகவில் சிலர் ஆதாயம் பார்ப்பதற்கு பிளவுபடுத்தி வருகின்றனர்

இதையடுத்து சசிகலா செய்தியாளர்களிடம் பேட்டியில் கூறியதாவது.. திமுகவில் கடந்த ஓராண்டு ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. தமிழகம் முழுவதும் 600 க்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக சென்னை பெருநகராட்சியில் சென்னையில் அதிகப்படியான கொலைகள் நடைபெற்றுள்ளன. சென்னை காவல் ஆணையர் கட்டுப்பாட்டை மூன்றாகப் பிரித்தது தவறு. மூன்று ஆணையர் இருப்பது குற்றங்கள் நடைபெற காரணமாகியுள்ளது. குறிப்பாக இந்த ஆட்சியில் திமுகவினர் காவல் நிலையங்களில் தலையிடுகின்றனர்.
திமுகவின் ஆட்சி நிர்வாகம் சரியில்லை. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தற்போது அதை விடுத்து முன்னாள் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தனர். அதில் 400க்கும் மேற்பட்டவை தற்போது நிறைவேற்றி விட்டதாக கூறி வந்தாலும், எந்த வாக்குறுதியும் நிறைவேற்றியதாக தெரியவில்லை. மக்கள் எதுவும் பயனடையவில்லை.

சென்னை வானகரத்தில் நடைபெறும் செயற்குழு கூட்டம் உண்மையான அதிமுக செயற்குழு கூட்டம் கிடையாது. என்னை தலைமை ஏற்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம்.

தமிழகத்தில் பிஜேபி எந்தவிதத்திலும் கால் ஊன்றில்லை. வளர்ச்சியடையவில்லை. திமுக தற்போது திராவிட மாடல் என்று கூறி வருகின்றனர். திராவிட மாடல் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது.

ஏழை எளியவர்கள் வளர்ச்சி பெற வேண்டுமென எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்கள், ஜெயலலிதா இருந்தபோது செய்த திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. அதுதான் முக்கியம். என்று கூறிக்கொள்கிறார்கள் என கூறினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!