முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன்… என்னோட நிலைப்பாடு அதுதான் : அண்ணாமலை உறுதி!!
Author: Udayachandran RadhaKrishnan19 March 2023, 5:38 pm
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவது ஏற்புடையதல்ல என்பது என் நிலைப்பாடு. அதில் உறுதியாக இருக்கிறேன். எவ்வித மாற்றுக்கருத்தும் அதில் இல்லை.
என்னுடைய கருத்து குறித்து டெல்லி மேலிட தலைவர்கள் பலரிடமும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசி வருகிறேன். கட்சிக்குள் நான் பேசியதாக கூறப்படும் கருத்துகள் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அது நல்லது தான். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. தேர்தலுக்கு பணம் செலவு செய்யும் அரசியல் எனக்கு தேவையில்லை. நான் காவல் அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்துவிட்டு தற்போது கடன்காரனாக இருக்கிறேன்.
தமிழ்நாட்டில் இன்றைக்கும் பணம் செலவு செய்யாமல் தேர்தலை சந்திப்போருக்கான வாக்குவங்கி, மாற்றத்தை முன்னிருத்துவோருக்கான வாக்குவங்கி இருக்கிறது. இரண்டாண்டு அரசியல் அனுபத்தில் இதை நான் நம்புகிறேன்.
நான் எந்த அரசியல் கட்சிக்கும், அரசியல் தலைவருக்கும் எதிரி இல்லை. தேர்தலை சந்திப்பது குறித்த என் நிலைப்பாட்டை கூறுகிறேன் அவ்வளவு தான். அதில் 50% நபர்களுக்கு உடன்பாடும் , 50% எதிர் கருத்தும் உள்ளது. ஆனால் என் நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.