தமிழக ஆளுநரை மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன் : மதுரையில் திமுக நிர்வாகி போஸ்டர் ஒட்டி மிரட்டல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 June 2023, 6:17 pm

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை வரும் 27ம் தேதிக்குள் மாற்றாவிட்டால் மறுநாள் 28ம் தேதி மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலை முன் தீக்குளிக்கப்போவதாக மதுரையைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர், நகர் முழுவதும் போஸ்ட்டர் ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், திமுக அரசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. கடைசியாக அமைச்சர் செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க ஆளுநர் ரவி ஒப்புதல் கொடுக்க மறுத்துவிட்டார்.

ஆனால், தமிழக அரசு சிறப்பு ஆணை பிறப்பித்து இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதாக அறிவித்தது. ஆளுநரிடம் மட்டுமில்லாது, மத்திய அரசுக்கும், திமுக அரசுக்கும் இடையேயும் முரண்பாடு நீடிக்கிறது.

இதை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் சமூக வலைதளத்தில் காணொலி ஒன்று வெளியிட்டு, திமுகவையோ, திமுககாரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை என்று கூறியுள்ளார். இது திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மத்திய அரசாலும், தமிழக ஆளுநராலும் திமுக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் நெருக்கடி ஆளாகுவதை பார்த்த திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் ஆளுநர், மத்திய அரசுக்கு எதிரான தங்கள் அதிருப்திகளை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மதுரையில் ஒய்வு பெற்ற ஆவின்பணியார்கள் நலச்சங்க தலைவரும், ஆவின் திமுக தொழிற்சங்க கவுரவ தலைவருமான(எல்பிஎஃப்) மானகிரி கணேசன் என்பவர், தமிழக ஆளுநரை வரும் 27ம் தேதிக்குள் மாற்றாவிட்டால் மறுநாள் 28ம் தேதி மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலை முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நகர் முழுவதும் போஸ்ட்டர் ஓட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அவர் அந்த போஸ்டரில், தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக இரவு, பகல் பராமல் அயராது பாடுபட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வர அரும்பாடுபட்டு வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு இடையூறாக செயல்பட்டு வருகிறார்.

ஆகவே, ஒன்றிய அரசே உடனடியாக தமிழகத்தில் இருந்து வரும் 27ம் தேதிக்குள் ஆளுநரை மாற்ற வேண்டும். மாற்றாவிட்டாடல் மறுநாள் 28ம் தேதி மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலை முன் தீக்குளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். திமுக நிர்வாகியின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!