செந்தில் பாலாஜி வாயை திறந்தா முதலமைச்சர் குடும்பமே சிக்கிடும் : முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பரபரப்பு குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan21 June 2023, 4:14 pm
திமுக அரசை கண்டித்தும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கோவை மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
அப்போது அவர் கூறியதாவது, மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சராக இருந்து தற்போது இலாக்கா இல்லாத அமைச்சராக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜியை பதவி விலக கோரியும் முதலமைச்சரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மேலும் எடப்பாடியார் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டம், சாலை பணிகள், மேம்பால பணிகள் எல்லாம் முடிக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய முப்பதாயிரம் கோடி குறித்து விசாரணை நடத்த கோரியும், கோவை மாவட்டத்தில் உள்ள சாலைகளின் நிலைமைகளை கண்டித்தும், கேரளாவில் அணை கட்டி வரும் கேரள அரசை தடுக்காமல் உள்ள திமுக அரசை கண்டித்தும், கனிம வளங்கள் கடத்தலை தடுத்து நிறுத்த கோரியும், இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் தற்போதைய முதல்வர் திறந்து வைத்து வருகிறீர்கள். இந்த ஆட்சி உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும்.
7.5% இட ஒதுக்கீடு கொடுத்து மருத்துவ மாணவர்கள் 600 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவராக வாய்ப்பு தந்த எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் முடிவு செய்துள்ளார்கள்.
உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை உடனடியாக மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என கூறிக்கொண்டு முதலமைச்சரின் குடும்பம் அனைவரும் செந்தில் பாலாஜி இருக்கும் மருத்துவமனையில் தான் உள்ளார்கள்.
அவர் ஏதேனும் கூறி விடுவாரோ என்ற பயத்தில் தான் அனைவரும் அங்கு சென்று கொண்டிருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுக்கு முக்கியமான எதிரி நான் தான். கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் நாங்கள் வென்றோம். அதெல்லாம் பொறுக்க முடியாமல் தான் மூன்று முறை எங்களது வீட்டில் சோதனையை நடத்தி பிறகு ஒன்றும் இல்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார்கள்.
தற்போது அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. கோடநாடு பிரச்சினையை வெளியில் கொண்டு வந்து நடவடிக்கை எடுத்ததே எடப்பாடியார் தான்.
என்னை பொருத்தவரை தனிப்பட்ட முறையில் அவர்(செந்தில்பாலாஜி) நன்றாக இருக்க வேண்டும் என்பது தான், ஆனால் அவர் செய்த தவறுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவருக்கு உடல்நிலை நன்றாக உள்ளதா இல்லையா என்பது எனக்கு தெரியாது மருத்துவர்களுக்கு தான் தெரியும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு வரும் பொழுது இன்று காலை அறுவை சிகிச்சை என உள்ளே அழைத்துச் சென்று விட்டார்கள், இதில் என்ன நடக்கும் என்று நாட்டு மக்கள் பார்த்து வருகிறார்கள். நன்றாக இருக்கக்கூடிய ஒரு மனிதரை இவ்வாறு செய்கிறார்களே என்ற வருத்தத்தில் மக்கள் உள்ளார்கள் என தெரிவித்தார்.