பாராட்ட மனசு வரலைனா சும்மா இருங்க… வயித்தெரிச்சல்ல கொச்சைப்படுத்தாதீங்க : திமுக எம்பி திருச்சி சிவா ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2023, 4:35 pm

பாராட்ட மனசு வரலைனா சும்மா இருங்க… வயித்தெரிச்சல கொச்சைப்படுத்தாதீங்க : திமுக எம்பி திருச்சி சிவா ஆவேசம்!

நெல்லை மத்திய மாவட்ட திமுக மருத்துவரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை தச்சநல்லூரில் பகுதி கழகச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினரும் கழக கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார் அப்போது அவர் பேசுகையில் தமிழக மக்கள் தங்களுக்கு வேண்டியதை கேட்காமலேயே பெறுகின்ற ஒரு நல்ல ஆட்சி நடந்து வருகிறது.

திமுக மட்டுமல்லாது உலக முழுவதும் இருக்கும் தமிழர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞரை கொண்டாடி வருகின்றனர் கலைஞர் 50 ஆண்டுகாலம் ஒரு கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் முதல்வர் என தனது உழைப்பால் உயர்ந்தவர்.

அவர் எழுத்துக்கள், கடிதம், நாடகம், வசனம் என இன்றும் அவர் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். இந்திய அரசியலைத் தீர்மானிக்கின்ற ஒற்றைத் தலைவராகவும் கலைஞர் இருந்துள்ளார்.

தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் பிறக்கவில்லை என்றால் நமது நிலை என்னவாக இருக்கும், அவர்களால் தான் இன்று பலர் உயர்கல்வி , வேலை வாய்ப்பு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் இவர்கள் விட்டு சென்ற பணியை இன்று நமது முதல்வர் மு க ஸ்டாலின் செய்து வருகிறார்.

திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல ஓட்டுப் பெரும் கட்சியாக மட்டுமல்ல சரித்திர மாற்றத்தை படைத்து ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமூக நீதியை நிலைநாட்டும் இயக்கம்.

மருத்துவம் படிப்பதற்கு தற்போது 12ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், நீட் தேர்வு எழுத வேண்டும் இது இன்றைய நிலை ஆனால் ஒரு காலத்தில் மருத்துவம் படிக்க கட்டாயம் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று சட்டமே இருந்தது.

ஆனால் எல்லோரும் சமஸ்கிருதம் படிக்க முடியாது இந்த நிலையை மாற்றி அனைவரும் மருத்துவம் படிக்கலாம் என்பதை கொண்டு வந்த பெருமை நீதி கட்சியை சேரும்.

ஒரு காலத்தில் சுயமரியாதை திருமணங்கள் அங்கீகரிக்கப்படாத நிலை இருந்தது இதனை மாற்ற முடியவில்லை என பெரியார் நினைத்திருந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வராக இருந்த அண்ணா சுயமரியாதை திருமணம் செல்லும் என்ற சட்டத்தையும் கொண்டு வந்தார்
அதோடு மட்டுமல்லாமல் இரு மொழிக் கொள்கையையும் அண்ணா சட்டமாக்கினார். இதனைத் தொடர்ந்து கலைஞர் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் பெண்களுக்கு சொத்துரிமை, வழங்கினார்.

காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். இதே திட்டத்தை எம்ஜிஆர் சத்துணவு திட்டமாக மாற்றினார் கலைஞர் அந்த உணவோடு முட்டை பழம் வழங்கினார்.

இன்றைய முதல்வர் மதிய உணவுடன், காலை சிற்றுண்டியும் வழங்கி வருகிறார். இந்தியாவிற்கே இது முன்மாதிரி திட்டமாக உள்ளது. இதனை ஒரு பத்திரிகை கொச்சைப்படுத்துகிறது , வயிற்று எரிச்சலின் வெளிப்பாடுதான் இது , ஒரு நல்ல திட்டத்தை பாராட்ட மனமில்லை என்றால் சும்மா இருங்கள்

இன்று இந்தியாவின் ஒட்டுமொத்த பார்வையும் அறிவாலயத்தின் வாயிலை உற்று நோக்குகிறது யார் பிரதமர் என தீர்மானிக்கும் சக்தியாக முதல்வர் மு க ஸ்டாலின் இருக்கிறார் என தெரிவித்தார்.

தொடர்ந்து அதிமுக கட்சியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி திருச்சி சிவா முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் மத்திய மாவட்ட பொறுப்பாளருமான டி.பி.எம் மைதீன்கான், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலை ராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சக்தியானத், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் கணேஷ் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 345

    0

    0