பிணவறையில் விளையாடும் பணம்.. 500 ரூபாய் கொடுத்தா சடலம் MORTUARYக்கு போகும் : அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2022, 6:06 pm

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (68). நுரையீரலில் பிரச்னை காரணமாக இவர் கடந்த சில மாதங்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

தொடர் சிகிச்சைக்குப் பிறகு, அவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஸ்ரீபெரும்புதூரிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். அப்போது அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக அவரை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் மனோகரனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அவரின் உறவினர்கள் மனோகரனின் உடலைக் கேட்டிருக்கிறார்கள். பதிவு செய்துவிட்டதால், பிரேத பரிசோதனை செய்த பிறகுதான் உடலைக் கொடுக்க முடியும் என்று மருத்துவமனைத் தரப்பில் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

அப்போது, அங்கு பணியிலிருந்த மருத்துவ உதவிப் பணியாளர் இளையராஜா என்பவர், பிணவறையில் உடலை வைப்பதற்கு 500 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

மனோகரனின் உறவினர்களும் அவர் கேட்ட பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இருந்தபோதிலும், உடலைப் பிரேத பரிசோதனை செய்யக் காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, கொடுத்த பணத்துக்கு ரசீது கேட்டபோது இளையராஜா வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்க முயன்றிருக்கிறார். அப்போது மனோகரனின் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சம்பவமறிந்து வந்த போலீஸார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உறவினர்கள், லஞ்சம் கேட்ட மருத்துவப் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இறந்தவரின் உடலைப் பிணவறைக்கு எடுத்துச்செல்ல லஞ்சம் கேட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 424

    0

    0