தடுத்து நிறுத்தப்பட்ட இளையராஜா.. ஸ்ரீவி ஆண்டாள் கோயிலின் விளக்கம் என்ன?
Author: Hariharasudhan16 December 2024, 11:15 am
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்திற்குள் இளையராஜா அனுமதிக்கப்படாதது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சை ஆகியுள்ளது.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உலகப் புகழ் பெற்றது ஆகும். இந்த நிலையில், இந்தக் கோயிலில் இளையராஜா வெளியிட்ட திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு, நேற்று (டிச.15) மாலை நாட்டியாஞ்சலி நடைபெற்றது. இதில் இளையராஜா கலந்து கொண்டார்.
மேலும், ராமானுஜ ஜீயர் மற்றும் சடகோப ராமானுஜ ஜீயர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளையராஜாக்கு பரிவட்டம் கட்டி, கோயில் யானை, மேளதாளங்கள் முழங்க பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இளையராஜா கோயிலுக்குள் தரிசனம் செய்யச் சென்றார்.
அப்போது, கோயில் கருவறைக்கு முன்பு இருந்த அர்த்த மண்டபத்தில் ஜீயர்கள், பட்டர்கள் உடன் உள்ளே செல்ல இளையராஜா முயன்றார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள், இளையராஜாவைக் கருவறைக்கு வெளியே நிற்குமாறு கூறினர். இதனையடுத்து, கருவறையில் இருந்து வெளியே வந்த இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.
இதையும் படிங்க: கல்யாணம் ஓவர்…சின்னத்திரை நடிகருக்கு மனைவி போட்ட பதிவு…இதெல்லவா காதல்…!
இதனைத் தொடர்ந்து அவருக்கு பரிவட்டங்கள் கட்டப்பட்டு, மரியாதை அளிக்கப்பட்டது. ஆனால், கோயில் கருவறைக்குள் இளையராஜா மறுக்கப்பட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாகம் தரப்பில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
அதில், “ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தையும் கருவறைp போன்றே பாவித்து வருகிறோம். அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களைத் தவிர பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்த சம்பவத்தன்று ஜீயர் உடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்திற்குள் தவறுதலாக நுழைந்தார்.
பின்னர், கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இளையராஜா வெளியே சென்றார். இளையராஜாவிற்கு கோயில் யானையை வைத்தோ, வெண்குடை பிடித்தோ வரவேற்பு அளிக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால், கடவுளைத் தவிர மனிதர்களுக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் எந்த ஒரு மரியாதையும் அளித்து அழைத்து வரக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.