வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோல் மால்? கோவை 32வது வார்டில் மறு தேர்தல் வேண்டும் : 13 வேட்பாளர்கள் மனு!!!
Author: Udayachandran RadhaKrishnan23 February 2022, 2:25 pm
கோவை : கோவை மாநகராட்சி 32வது வார்டில் மறு தேர்தல் நடத்த வேண்டும். வெற்றி பெற்ற வேட்பாளரை தவிர்த்து இதர வேட்பாளர்கள் மனு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. கோவை மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி 32 வது வார்டில் கட்சி மட்டும் சுயேச்சை வேட்பாளர்கள் என 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் திமுக வேட்பாளர் பார்தீபன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் மாறியுள்ளதாக கூறி அந்த வார்டில் போட்டியிட்ட இதர வேட்பாளர்கள் வெளிநடப்பு செய்து கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வெளிநடப்பு செய்த வேட்பாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருக்கமாக கட்டப்பட்டிருந்த கயிறு பிரிக்கப்பட்டு முத்திரை அகற்றப்பட்டு இருந்ததாகவும், அது குறித்து தேர்தல் அதிகாரிகள் முறையாக பதிலளிக்க மறுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் வாக்குப் பெட்டியில் உள்ள EVM எண்ணை தவிர மற்ற எண்களை தங்களுக்கும் பூத் ஏஜெண்டுகள் காண்பிக்காமல் வாக்குகளை எண்ண முயன்றதாகவும், பூத் ஏஜெண்டுகளின் கையெழுத்துகள் மாறுபட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
மேலும் 21ம்தேதி அன்று இரவு சுமார் 12 மணி முதல் 3 மணி வரை இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இதனால் வாக்கு பெட்டிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் அந்த வார்டில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
0
0