கள்ளக்காதல் விவகாரத்தில் தகராறு… தடுக்க சென்ற இளைஞர் குத்திக்கொலை ; 2 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
28 August 2023, 8:04 pm

தேனி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறை தடுக்ககச் சென்ற நபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள டொம்புச்சேரி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜா (33). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். அவரது அண்ணன் மருதமுத்து (36), இவரது மனைவி வீரலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் (24) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் வெளியே தெரிய வந்ததால் மருதமுத்து குடும்பத்தாருக்கும், பிரவீன் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி உள்ளனர்.

இருந்த போதும் வீரலட்சுமிக்கும், பிரவீனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு தொடர்ந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மருதமுத்து பிரவீனிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததுடன், உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் மிரட்டியும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், டொம்புச்சேரி சமுதாயக்கூடம் அருகே இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மருதமுத்து கத்தியால் பிரவீனை குத்த முன்றுள்ளார். இதனை மருதமுத்துவின் தம்பி ராஜா தடுத்துள்ளார். அப்போது, அருகில் உள்ள தனது வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்த பிரவீன் மருதமுத்துவை குத்த முயன்றுள்ளார். அவருக்கு ஆதரவாக பிரவீனின் மைத்துனர் தினேஷ்குமார் (26) என்பவரும் மருதமுத்துவை குத்த முன்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக இதனை தடுக்க வந்த ராஜாவை இருவரும் சரமாரியாக குத்தினர். இதில் கழுத்து மற்றும் விலா பகுதியில் சரமாரியாக குத்தப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனைத் தொடர்ந்து, பிரவீன் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடினர்.படுகாயம் அடைந்த ராஜாவை உறவினர்கள் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த ராஜாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராஜா உயிரிழந்த விவகாரம் தெரியாமல் நேற்று மருதமுத்து தன்னை கொலை செய்ய வருவதாகவும் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் பிரவீன் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரித்த போலீசார் ராஜா உயிரிழந்த தகவலை பிரவீனிடம் தெரிவித்து அவரை கைது செய்தனர்.

அவரிடம் நேற்று முதல் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியான தினேஷ்குமாரும் இன்று காலை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரவீன் மற்றும் தினேஷ்குமார் வீடுகளும் சூறையாடப்பட்டு வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் உடைக்கப்பட்டு வீட்டில் வெளியே இருந்த இருசக்கர வாகனம் உடைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு விலக்கச் சென்ற இளைஞர் கத்திக்குத்து பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 492

    0

    0