சட்டவிரோத காவலா? செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு… இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்!!
Author: Udayachandran RadhaKrishnan4 July 2023, 8:21 am
சட்டவிரோத பண பரிவர்த்தையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தது. அவரை கைது செய்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.
அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
இதனிடையே, செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாகவும் அவர் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த 27-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வு வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. இந்நிலையில், அமலாக்கத்துறை தனது கணவரை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.