சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்.. தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு அதிகாரிகள் சீல்!!

Author: Babu Lakshmanan
15 July 2022, 9:09 pm

ஈரோடு : ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சேலத்தில் தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்து ஈரோடு, பெருந்துறை, ஓசூர், சேலம், திருப்பதி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சிறுமியின் தாய் அவரது இரண்டாவது கணவர் மற்றும் தரகர் மாலதி, சிறுமியின் ஆதார் அட்டையில் திருத்தம் செய்தவர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு தரப்பில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது தமிழகம், ஆந்திரா மற்றும் கேரள மாநிலத்தில் விரிவான விசாரணை மேற்கொண்டது. அதன் விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள சுதா மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனை மற்றும் பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதனைத்தொடர்ந்து சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் சுதா மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர் மேலும் மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகளை இரண்டு வாரத்திற்குள் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர் தொடர்ந்து 15 நாட்கள் கழித்து மருத்துவமனைக்கு சீல் வைக்கப்படும் என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 982

    0

    0