கொதிக்கும் நெய் சட்டியில் கையை விட்டு வடையை எடுத்து நேர்த்திக்கடன் ; அரோகரா முழக்கமிட்டு பக்தர்கள் சாமி தரிசனம்!!

Author: Babu Lakshmanan
16 August 2022, 9:47 pm

ஆடி மாத கடைசி செவ்வாய் கிழமையை ஒட்டி கொதிக்கும் நெய் சட்டியில் கையை விட்டு வடை எடுத்து பெண் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தியது அங்கு கூடியிருந்த சக பக்தர்களை பதைபதைக்க வைத்தது.

திருவண்ணாமலை அடுத்த செ.அகரம் கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ.சந்தியம்மன் திருக்கோவில். இத்திருக்கோவிலில் ஒவ்வொரு ஆடி மாதமும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து பொங்கலிட்டு நேர்த்தி கடன் செலுத்தி வருவது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ச்சியாக பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை ஒட்டி இன்று சின்ன கோலாப்பாடி, செ. அகரம், பண்டிதப்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் கோவில் அருகே ஒன்று திரண்டு பொங்கல் வைத்து கிடாவெட்டி நேர்த்திக் கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சின்ன கோலாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க சந்தி அம்மாள் என்ற பெண்மணி, கடந்த 48 தினங்களாக தொடர்ந்து விரதம் இருந்து கொதிக்கும் நெய் சட்டியில் இருந்து வடை எடுக்கும் வைபவம் விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக, திருக்கோவிலுக்கு மேல்புறம் மண்ணால் செய்யப்பட்ட சட்டியில் நெய் ஊற்றி நன்றாக கொதித்த பிறகு 48 நாள் விரதம் இருந்த சந்தி அம்மாள் ஒவ்வொரு வடையாக போட்டு தனது இரு கையால் அதனை எடுத்து பக்தர்களுக்கு காண்பித்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.

திருக்கோவிலில் கூடியிருந்த மக்கள் அரோகரா அரோகரா என முழக்கமிட்டு சந்தியம்மனை வழிபட்டனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 539

    0

    0