“அடிச்சு கொல்லுங்கடா”.. தலைக்கேறிய போதையில் போலீசை தாக்கிய புள்ளிங்கோ..!
Author: Vignesh5 August 2024, 1:34 pm
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் போதையில் போலீஸ்காரரை தாக்கிய இளைஞர்களை பொதுமக்கள் புரட்டி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வத்தலகுண்டு திண்டுக்கல் சாலையில் இளைஞர்கள் மூன்று பேர் போதையில் சாலையில் செல்வோரிடம் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது கொண்டிருந்த வத்தலகுண்டு காவல் நிலைய தலைமை காவலர் முத்துடையார் போதை இளைஞர்களை அப்பகுதியில் இருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது, அந்த இளைஞர்களுக்கும் முத்துடையாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் முத்துடையார் போதை இளைஞர்களால் தாக்கப்பட்டார்.
இந்நிலையில், இச்சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் போலீசை தாக்கிய போதை இளைஞர்களை புரட்டி எடுத்தனர்.
இதனை அடுத்து, சம்பவம் தொடர்பாக தலைமை காவலர் முத்துடையார் அளித்த புகாரின் அடிப்படையில் போதையில் ரகளையில் ஈடுபட்ட அய்யன்கோட்டை கிராமத்தை சேர்ந்த சுதன்பிரபு, அழகிரி, ஜெயராஜ் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்த வத்தலகுண்டு போலீசார் அவர்களை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.