கடைசியா சுடுகாடு செல்ல கூட வழியில்ல… கரும்பு தோட்டத்தில் சடலத்தை எடுத்து சென்ற அவலம் : பொதுமக்கள் கவலை!!!
Author: Udayachandran RadhaKrishnan19 December 2022, 12:40 pm
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்பசார் ஊராட்சிக்குட்பட்ட அவனம்பட்டு கிராமத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவனம்பட்டு காலனி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு சுமார் 25 சென்ட் அளவிற்கு குறைந்த அளவு சுடுகாடு உள்ளது. இதற்கு முறையான பாதை வசதியும் இல்லை.
இந்த நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஏழுமலை என்பவருக்கு சொந்தமான 1 ஏக்கர் 60 சென்ட், விவசாய நிலத்திற்கு இடையே சுடுகாடு பாதைக்காக அரசு சார்பில் சாலை அமைத்துள்ளனர்.
இதுகுறித்து ஏழுமலை என்பவர் மகன் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றுள்ளார் இந்த நிலையில் இன்று அதே பகுதியில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக தடை உத்தரவு பிறப்பித்துள்ள வழியாக உடலை எடுத்துச் செல்லக்கூடாது என வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் தெரிவித்ததால் இருந்த மூதாட்டியின் உடலை சாலையிலே வைத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினரின் பேச்சுவார்த்தையை அடுத்து அங்கிருந்த கரும்பு தோட்டங்கள் வழியாக மூதாட்டியின் உடலைஎடுத்துச் சென்றனர்.
இதனால் கரும்பு தோட்டத்தில் இருந்த கரும்பு பயிர்கள் முழுவதும் சேதமடைந்தது. இதே கிராமத்தில் அந்த சுடுகாடுக்கு அருகிலேயே அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் 80 சென்ட் நிலம் உள்ளது.
அதில் சுடுகாடு அமைத்தால் எந்த தரப்பிற்கும் பிரச்சனை இல்லாமல் இருக்கும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.