மத நல்லிணக்கம் உடைய மண்ணில் பெருச்சாளிகள் புகுந்து தில்லு முல்லு செய்யுது : கோவை ADMK வேட்பாளர் பிரச்சாரம்!
Author: Udayachandran RadhaKrishnan10 April 2024, 4:27 pm
மத நல்லிணக்கம் உடைய மண்ணில் பெருச்சாளிகள் புகுந்து தில்லு முல்லு செய்யுது : கோவை ADMK வேட்பாளர் பிரச்சாரம்!
கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் சாய்பாபா காலனி உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவி சிறப்பான வரவேற்பளித்தனர்.
மேலும் அங்கிருந்த இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை சிங்கை ராமசந்திரன் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், திமுக இவர்களின் பாதுகாவலர் அவர்களின் பாதுகாவலர் என்றெல்லாம் கூறுவார்கள் என தெரிவித்த அவர், ஆனால் அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என கூறினார்.
மேலும் அதிமுக மக்களுக்கான இயக்கம் எனவும் கொரோனா காலத்தில் எந்தவித கட்சி பேரமும் பாராமல் அனைவருக்கும் உதவிய இயக்கம் அதிமுக தான் என தெரிவித்தார். எம்ஜிஆர், ஜெயலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வழியில் ஜாதி மத பேதமின்றி எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் இல்லாமை என்கின்ற நிலை வேண்டும் என்று உழைக்கின்ற இயக்கம் அதிமுக என தெரிவித்தார்.
மேலும் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட அவர் நோன்பு கஞ்சிக்கு வழங்கப்பட கூடிய அரிசையை கொடுத்து உதவியது அம்மா(ஜெயலலிதா) எனவும் அதனை மேலும் உயர்த்தி வழங்கியது எடப்பாடியார் என கூறினார். சிறு வயதில் இருந்தே அனைவரும் மனித நேயத்துடன் தான் பழகி வருகிறோம் எனவும், ரம்ஜானுக்கு இஸ்லாமியரகள் பிரியாணி கொடுப்பார்கள், கிறிஸ்துமஸ்க்கு கிறிஸ்துவர்கள் கேக் கொடுப்பார்கள், தீபாவளிக்கு இந்துக்கள் இனிப்புகள் கொடுப்பார்கள், தமிழர் திருநாளான பொங்கலை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம் எனவும் அப்படிப்பட்ட நாடு தமிழ்நாடு எனவும், அப்படிப்பட்ட ஊர் கோயமுத்தூர் என்றார்.
மத நல்லிணக்கம் உடைய, சகோதர சகோதரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய மண் தமிழக மண் எனவும் அதில் சில பெருச்சாளிகள் உள்ளே புகுந்து தில்லுமுல்லு வேலைகள் செய்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் சம்மட்டி அடி வாங்குவது உறுதி உறுதி உறுதி என எடுத்துரைத்தார்.
எனவே மதவாத கட்சியான பாஜகவும் வேண்டாம் குடும்ப கட்சியான திமுகவும் வேண்டாம் மக்களுக்கான இயக்கமான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.