விடாமல் பெய்த கனமழை… கோவையில் கோவில்கள், விளைநிலங்களில் புகுந்த மழை நீர் : சாலைகளில் கரைபுரண்ட வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி!
Author: Udayachandran RadhaKrishnan8 December 2023, 2:39 pm
விடாமல் பெய்த கனமழை… கோவையில் கோவில்கள், விளைநிலங்களில் புகுந்த மழை நீர் : சாலைகளில் கரைபுரண்ட வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி!
கோவை,நீலகிரி உட்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல் கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
குறிப்பாக அன்னூர், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள அன்னூர் குளம் , ஒட்டார் பாளையம் குளம், ஊத்துப்பாளையம் குளம், கஞ்சப்பள்ளி குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பியது.
குளங்கள் நிரம்பியதன் காரணமாக அதிலிருந்து வெளியேறும் நீர் அன்னூர் – சத்தியமங்கலம் சாலையில் மழைநீர் ஓடுகிறது.இதன் காரணமாக இந்த சாலையை கடக்கும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் மழை நீர் தண்ணீர் தேங்கி உள்ளதுடன், குளத்தில் இருந்து வெளியேறும் நீர் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் செல்வதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக குளங்களுக்கு தண்ணீர் வரத்து இருப்பதன் காரணமாக அன்னூரில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் கோவை நகரில் காலை முதல் லேசான சாரல் மழை மட்டும் பெய்து வருகிறது.