தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ஐ.டி ரெய்டு; 20 மணிநேரத்திற்கு மேலாக நடந்த சோதனை… வங்கி அளித்த பரபரப்பு விளக்கம்…!

Author: Babu Lakshmanan
28 June 2023, 11:06 am

தூத்துக்குடியிலுள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தலைமை அலுவலகத்தில், வருமான வரித்துறையின் 16 பேர்கொண்ட அதிகாரிகள் குழு நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி, வி.இ.ரோட்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த வங்கி இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 533 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களுடன் இயங்கி வருகிறது.

இந்த வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று காலை 10:30 மணி அளவில் மதுரை, திருச்சி, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த வருமான வரித்துறையின் 16 பேர்கொண்ட நுண்ணறிவுப் பிரிவு குழு அதிகாரிகள், 6 வாகனங்களில் வந்தனர்.

அவர்கள் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். வங்கித் தலைமை அலுவலகங்கள் அமைந்திருக்கும் இரண்டு வளாகங்களிலும் உள்ள வங்கியின் முக்கிய அதிகாரிகளிடமும் தீவிர விசாரணை நடத்தினர். கடந்த சில நாள்களுக்கு முன்னர் வங்கி நிர்வாகம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் சில பரிவர்த்தனைகள் மீது சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால், வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

விசாரணையின்போது, வெளி நபர்கள் யாரும் வங்கித் தலைமை அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் வங்கிப் பணியாளர்கள் மட்டும் வழக்கம்போல் உரிய அடையாள அட்டையைக் காண்பித்து அலுவலகத்துக்குள் சென்றனர். மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து தூத்துக்குடி தென்பாகம், மத்தியபாகம் போலீஸார் மற்றும் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தச் சோதனையில், தற்போது வரையிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இன்று 28.6.23 காலை வரை நடைபெற்றது

இந்த நிலையில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் விளக்கக் கடிதம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், ‘தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சட்டம் 1961 பிரிவு 285 பி.ஏ-ன் படி சட்டரீதியான விசாரணை நடந்தது. இந்த விசாரணைக்கு வங்கி முழுமையாக ஒத்துழைப்பு அளித்தது. வருமானவரித்துறை அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கப்படும். இதனால் வங்கியின் எந்த செயல்பாடும் பாதிக்கப்படவில்லை,’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அலுவலகத்தில் கடந்த 20 மணி நேரமாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை முடிவுக்கு வந்த நிலையில், கட்டுக்கட்டாக ஆவணங்களை ஐந்துக்கும் மேற்பட்ட பைகளில் வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றதால் பரபரப்புக்குள்ளானது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ